ஸ்டெய்ன் அசத்தல், தென்னாபிரிக்காவிற்கு இலகுவான வெற்றி

241
SA v NZ Day 4

தென் ஆபிரிக்கா – நியூசிலாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா அணி டு பிளிசிஸ் (112), ஸ்டீபன் குக் (56), குயிண்டான் டி காக் (82), அம்லா (58), டுமினி (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இனிங்ஸில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 481 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

பின்னர் முதல் இனிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 58.3 ஓவர்களில் 214 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் கென் வில்லியம்சன் 77 ஓட்டங்களையும், நிகோலஸ் 36 ஓட்டங்களையும், நீல் வாக்னர் 31 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்கா அணி சார்பில் ஸ்டெயின், ரபாடா தலா 3 விக்கட்டுகளும், பிலாண்டர் 2 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி முதல் இனிங்ஸில் 214 ஓட்டங்களோடு சுருண்டதால், தென் ஆபிரிக்கா அணி 267 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்த ஓட்டங்களோடு 2-வது இனிங்ஸை விளையாடிய தென் ஆபிரிக்கா அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 105 ஓட்டங்களை எடுத்திருந்தது. பவுமா 25 ஓட்டங்களையும், பிலாண்டர் 3 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிலாண்டர் 14 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின் தென் ஆபிரிக்கா அணி மேலும் 27 ஓட்டங்களை சேர்த்து 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை எடுத்த நிலையில் 2-வது இனிங்ஸை நிறுத்திக் கொண்டது. பவுமா 40 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இரண்டு இனிங்ஸையும் சேர்த்து தென் ஆபிரிக்கா 399 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 400 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

400 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் லாதம், குப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென் ஆபிரிக்கா வீரர்களின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினின் அபாரப் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினார்கள்.

லாதம், குப்தில் ஆகியோர் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த வில்லியம்சன் 5 ஓட்டங்களோடு பிலாண்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். அனுபவ வீரர் டெய்லரையும் ஸ்டெயின் டக் அவுட் ஆக்கினார்.

இதனால் நியூசிலாந்து அணி 7 ஓட்டங்களை எடுப்பதற்குள் நான்கு விக்கட்டுகளை இழந்தது. பின் 5-வது விக்கட்டுக்கு நிக்கோல்ஸ் உடன் விக்கட் காப்பாளர் வாட்லிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஓட்டங்கள் 75 ஓட்டங்களை எட்டி இருந்த போது வாட்லிங் 32 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதனால் நிகோல்சிற்கு சிறந்த அனுபமுள்ள வீரர் யாரும் துணையாக நின்று ஆட கிடைக்கவில்லை. இதனால் விக்கட்டுகள் குறித்த இடைவேளைகளில் விழுந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணியின் நிகோலஸ் தனி மரமாக ஆடி 76 ஓட்டங்களைப் பெற வாட்லிங் 32 ஓட்டங்களையும் ப்ரெஸ்வல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சில் டேல் ஸ்டெயின் 5 விக்கட்டுகளைப் பறிக்க ரபடா மற்றும் பிளண்டர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் பங்கு போட்டனர். போட்டியின் ஆட்ட நாயகனாக குயின்டன் டீ கோக் தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று வெற்றி கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 481/8d

டுப்ளசிஸ் 112*, ஜெ. பி டுமினி 88, ஸ்டிபன் குக் 56, குயின்டன் டி கொக் 82, ஹசீம் அம்லா 58

நீல் வாக்னர் 86/5, டொக் ப்ரெஸ்வெல் 98/1

நியூசிலாந்து – 214/10

கென் வில்லியம்சன் 77, நிகோலஸ் 36, நீல் வாக்னர் 31

காகிஸோ ரபடா 62/3, டேல் ஸ்டெய்ன் 66/3, பிளண்டர் 43/2

தென் ஆபிரிக்கா – 132/7d

குயின்டன் டி கொக் 50, பவுமா 40*, பிளண்டர் 14

டிம் சவ்தி 46/3, ட்ரெண்ட் போல்ட் 44

நியூசிலாந்து – 195/10

நிகோலஸ் 76, வாட்லிங் 32, ப்ரெஸ்வல் 30

டேல் ஸ்டெய்ன் 33/5, பிளண்டர் 34/2, காகிஸோ ரபடா 54/2

தென் ஆபிரிக்கா அணி 204 ஓட்டங்களால் வெற்றி