அசலங்க மற்றும் வீரக்கொடி சதத்துடன் பிரகாசிப்பு

172
SL v ZIM

தென்னாபிரிக்காவின் சுற்றுப்பயணம் நிறைவில் தொடர்ந்து சிம்பாப்வேவிற்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலாவது டெஸ்ட் போட்டியை சிம்பாபே அபிவிருத்தி அணியுடன் 28ஆம் திகதி  ஹராரே மைதானத்தில் ஆரம்பித்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அபிவிருத்தி அணியின் தலைவர் ரமேஷ் புத்திக சிம்பாபே அபிவிருத்தி அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் பிரியன் சாரீ, சார்லஸ் குஞ்செ ஆகியோர் இணைப்பாட்டமாக 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர்.

அதைத் தொடர்ந்து அரைச்சதம் பெற்ற குஞ்சே 53  ஓட்டங்களுடனும், சாரீ 76 ஓட்டங்களுடன்  ஆட்டமிழந்தனர்.

சிம்பாபே அபிவிருத்தி அணி முதலாவது இனிங்ஸ் முடிவில் சகல விக்கட்டுகளயும் இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தனர்

இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் செஹான் மதுசங்க, அணுக் பெர்னாண்டோ, அசலங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இனிங்ஸ்  முடிவில் சிம்பாபே அபிவிருத்தி அணியினர் 100.1 ஒவர்களுக்கு முகம் கொடுத்து 349 ஓட்டங்களுக்கு சகல  விக்கட்டுகளையும் இழந்தனர்.

இரண்டாவது நாளில் முதலாவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் 5 விக்கட்டுகளை இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சந்துன் வீரக்கொடி 167 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 151 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மறு முனையில் நிதானமாக ஆடிய அசலங்க ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்று சதத்தைப் பூர்த்திசெய்தார். இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக 236 ஓட்டங்களைப் பெற்று  அணிக்கு வலுவூட்டினர். சிம்பாபே அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் விக்டர் 42 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் இரண்டாவது நாள் ஆட்டமும் நிறைவடைந்தது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்க 5 விக்கட்டுகள் கைவசத்துடன்  62 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அபிவிருத்தி அணியினர் 3வது நாளைத் தொடரவுள்ளனர்.

போட்டியின் சுருக்கம் :

சிம்பாபே அபிவிருத்தி அணி – 346

ப்ரியன் சாரீ 76, சார்லஸ் குஞ்சே 53, கும்பீ 47, முஸகண்டா 61, ஜொங்வெ 50

அசலங்க 2/79, செஹான் மதுசங்க 2/69, சதுரங்க 1/52, தனஞ்சய 1/73, பெர்னாண்டோ 2/23

இலங்கை அபிவிருத்தி அணி –  287/5

சந்துன் வீரக்கொடி 151, அசலங்க 100*, புத்திக்க 17

விக்டர் 3/42, மும்பா 2/63