முதல் நாளில் 4 அரைச்சதங்கள்

219
SA-v-NZ-Day-1

வில்லியம்சின் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட  தொடரில் டர்பனில் நடந்த முதல் டெஸ்ட்டில் மழையால் 3 நாட்களின் ஆட்டம் பந்துகள் ஏதும் வீசப்படாத நிலையில் முடிவுக்கு வந்து இறுதியில் போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.  

தென் ஆபிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இது இரு அணிகளும் மோதுகிற 42-வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இதுவரை நடந்த 41 போட்டியில் தென் ஆபிரிக்கா 23 டெஸ்டிலும், நியூசிலாந்து 4 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 டெஸ்ட் சமநிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடி வரும் தென் ஆபிரிக்க அணி இன்றைய 1ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தென் ஆபிரிக்க அணி சார்பாகத் துடுப்பாட்டத்தில் ஜெ. பி டுமினி 67 ஓட்டங்களோடும், பெப் டுப் லசிஸ் 13 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.  இவர்களைத் தவிர ஆட்டம் இழந்த 3 வீரர்களும் மிக சிறப்பாக விளையாடி அரைச் சதங்களை பூர்த்தி செய்து இருந்தனர்.

இதில் ஸ்டிபன் குக் 56 ஓட்டங்களையும் குயின்டன் டி கொக் 82 ஓட்டங்களையும் ஹசீம் அம்லா 58 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் நீல் வாக்னர் 2 விக்கட்டுகளையும் டொக் ப்ரெஸ்வெல் 1 விக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 283/3

ஜெ. பி டுமினி 67*, ஸ்டிபன் குக் 56, குயின்டன் டி கொக் 82, ஹசீம் அம்லா 58

நீல் வாக்னர் 51/2, டொக் ப்ரெஸ்வெல் 65/1