இலங்கை ஒருநாள் குழாமில் இன்னுமொரு மாற்றம்

3509
LAHIRU KUMARA

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணியும்  2 ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்தத் தொடர் சூடு பிடித்துள்ளது.

அத்தோடு இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற உள்ள 3 ஆவது ஒருநாள் போட்டியின் பின் தனது ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க உள்ளார்.

இந்த நிலையில் 3ஆவது போட்டியை முன்னிட்டு இலங்கை அணி நேற்று தம்புள்ள நோக்கி பயணமாகி இருந்தது. கண்டி திரித்துவக் கல்லூரி அணிக்காக விளையாடிய 19 வயது நிரம்பிய வலதுகை வேகப் பந்து வீச்சாளார் லஹிரு குமார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாய் நாடு திரும்பியது. இதில் இலங்கை இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணியாக இளம் வீரர் லஹிரு குமார் காணப்பட்டு இருந்தார். அத்தோடு ஒருநாள் தொடரிலும் சிறப்பாக இவர் பந்து வீசியதை அடுத்தே அவுஸ்திரேலிய ஒருநாள் குழாமில் இவர் இணைந்துள்ளார்.

இவரது வருகையால் இலங்கை அணியில் முதல் 2 போட்டிகளுக்கும் இணைக்கப்பட்ட மிலிந்த சிறிவர்தன அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 1ஆவது போட்டியின் நாணய சுழற்சிக்கு 10 நிமிடங்களுக்கு முன் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் அடைந்து இருந்தமையினால் அவருக்குப் பதிலாக இலங்கை அணியில் 26 வயது நிரம்பிய மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் எஞ்சலோ பெரேரா அணியில் இணைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.