நாடு திரும்புகிறார் ஸ்மித், தலைமைப் பதவி வோர்னருக்கு

298
Warner captain as Smith withdrawn

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும், எஞ்சலோ மெதிவ்ஸ் 57 ஓட்டங்களையும், குசல் பெரேரா 54 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 48 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலளித்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுத் தொடரை 1 – 1 என்ற ரீதியில் சமன் செய்தது.

இந்த நிலையில் இந்தப் போட்டியின் பின் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதன் போது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அடுத்து வரும் தென் ஆபிரிக்க தொடரை வெற்றிகரமாக சந்திக்க தயாராக தான் தாயகம் திரும்ப உள்ளதாக கூறியுள்ளார். இதனால் அடுத்த 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளுக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவராக டேவிட் வோர்னர் செயற்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

29 வயதான டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பதவியை ஏற்பதன் மூலம் அவுஸ்திரேலிய ஒருநாள் அணியை வழிநடத்த உள்ள 23ஆவது தலைவராகவும் அவுஸ்திரேலிய டி20 அணியை வழிநடத்த உள்ள 10ஆவது தலைவராகவும் அமைவார் என்பது முக்கிய அம்சமாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இந்த வருட பருவகால கிண்ணத்தை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி கொள்ள அணியை வழிடத்திய பெருமைக்குரிய டேவிட் வோர்னர் இதுவரை 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38.18 என்ற துடுப்பாட்ட சராசரியில் 2711 ஓட்டங்களையும் 61 டி20 போட்டிகளில் விளையாடி 28.15 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1633 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இதேவேளை “ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன் அடித்துக் கொள்கிறேன்” என ரங்கன ஹேரத்திடம் நகைச்சுவையாக நட்பு முறையில் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக 0-3 என்ற அடிப்படையில் வையிட் வொஷ் ஆனது அவுஸ்திரேலிய அணி. இந்நிலையில் ஆஸியின் தலைவர் தான் ஆட்டமிழந்த விதம் மற்றும் ரங்கன ஹேரத்தின் அபார பந்து வீச்சு குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு ஸ்மித் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த ஊடகத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

குறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கன ஹேரத் இல்லை என்பதை அறிவேன். அவர் ஒருநாள் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு 37 வயதாகியிருக்கலாம் ஆனாலும் அவர் இன்னும் ஒரு அபாரமான பந்து வீச்சாளர். இந்தத் தொடரில் 6 இனிங்ஸ்களில் என்னை 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ஹேரத்தின் பந்துகளுக்கு எதிராக ஓட்டங்களை கஷ்டப்பட்டே எடுக்க முடியும். அவர் ஓட்டங்களை கொடுக்கும் பந்துகளை அதிகம் வீசாதவர். நாம் நம் ஆட்டத்தின் உச்சத்தில் எப்போதும் இருப்பதுடன் மிகவும் அவதானமாக இருப்பதும் அவசியம். அவரே அவர் வீசும் பந்து எவ்வளவு திரும்பும் என்று தெரியாது எனக் கூறுகிறார், அவருக்கே தெரியாது என்றால் துடுப்பாட்ட வீரர்களுக்கு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு எவ்வாறு?

ஹேரத்துடன் நட்பு முறையில் பேசினேன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விலகியது நல்லதாகப் போய்விட்டது, ஏனெனில் நான் கொஞ்சம் ரன்கள் எடுத்துக் கொள்கிறேன் என்று ஜோக் அடித்தேன்.

அவரும் தனது பந்து வீச்சுப் பாணி குறித்து முழுமையாக விளக்கினார். கையை உயர்த்துவது, தாழ்த்துவதன் மூலம் பந்தின் போக்கை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதை என்னிடம் பெருந்தன்மையாகத் தெரிவித்தார்.

அதேபோல் காற்றடிக்கும் போது பந்தின் பளபளப்பு பகுதியை வெளிப்புறமாக வைத்து எப்படி பந்தை சறுக்கவைப்பது என்பதையும் கூறினார்.

நான் பொதுவாக எதிரணி வீரர்களிடம் பெரிதாக வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆனால் அவர் என்னை அடிக்கடி ஆட்டமிழக்கச் செய்யும் போது நான் அவரிடம் பேசியாக வேண்டும் என நினைப்பேன். அவர் திறந்த மனதுடன் என்னிடம் பேசியதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் கட் செய்ய முயன்று ஆட்டமிந்ததை முற்றிலும் வெறுக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் பயிற்சியின் போது அந்த ஷொட்டை அதிகமுறை பயின்றதால் முயற்சி செய்தும் தோல்வி அடைந்தேன். பந்துகள் தாழ்வாக வரும்போது நேராக துடுப்பெடுத்தாட வேண்டும். எனது ஆட்டமிழப்புக்கள் இன்னும் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அடுத்த முறை இந்தத் தவறுகளை செய்யப்போவதில்லையென ஸ்மித் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.