விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த ஒரு மாதமாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி இனிங்ஸ் வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டி சமநிலையில் முடிந்தது.

கிராஸ் ஐலேட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 18ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. அந்த அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் வரை 22 ஓவர்களில் 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. 2-வது நாள் ஆட்டமும் மழையினால் முழுவதும் தடைப்பட்டது. அதன்பின் மழை பெய்யாவிடிலும் பவுண்டரி லைன் அருகே மைதானம் மிகவும் மோசமடைந்தது. இதை சரிசெய்ய எவ்வளவு முயற்சி எடுத்த போதிலும் சரிசெய்ய முடியவில்லை.

இதனால் கடைசி மூன்று நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டது. ஆகவே, இந்த டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்து பாகிஸ்தான் அணி சாதனை

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 3-0 என அவுஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது. இதனால் அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இடத்திற்கான விளம்பில் நின்று கொண்டிருந்தது.

அவுஸ்திரேலியா பிடித்த முதல் இடத்தை இந்தியா கடந்த 18ஆம் திகதி பிடித்தது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றாவிடில் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

தற்போது மழையினால் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிந்து தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியதால் பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 108 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியா அதே புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்