இங்கிலாந்து இளைஞர் அணி முதல் நாளில் முன்னிலையில்

212
SL youth cricket day 1

இங்கிலாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட  இளைஞர் அணிக்கும், இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட  இளைஞர் அணிக்கும் இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியானது நேற்று 26ஆம் திகதி இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் மைதானத்தில் ஆரம்பமானது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இங்கிலாந்து அணி 355 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் காணப்படுகிறது.

நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இளைஞர் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ஆரம்ப வீரர்களாக வெஸ்ட்பரி மற்றும் ஹோல்டன் ஆகிய வீரர்கள் களமிறங்கினர்.

இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹோல்டனிற்கு  அதிக  நேரம் மைதானத்தில் நிலைத்து நிற்க விடாத திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவனும்,இலங்கை 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண அணியை பிரதிநிதித்துவப்படுத்திய லஹிரு குமார 9ஆவது ஓவரில் ஹோல்டனின் விக்கட்டைக் கைப்பற்றினார். 24 பந்துகளுக்கு முகம் கொடுத்த நிலையில் 5 ஓட்டங்களுடன் ஹோல்டன் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கட்டுக்காக வெஸ்ட்பரி உடன் இணைந்த ஹன்கின்ஸ் நிதானமாகத் துடுப்பெடுத்தாடினார். இரண்டாவது விக்கட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சம்மு அஷான் ஹன்கின்ஸின் விக்கட்டை 30ஆவது ஓவரில் கைப்பற்றினார்.

68 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்று இருந்த ஹன்கின்ஸ் நிசங்கவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 85 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டை இழந்து காணப்பட்ட நிலையில் ஆட்டமிழக்காமல் மறு முனையில் இருந்த வெஸ்ட்பரி உடன் ஜோடி சேர்ந்தார் பார்ட்லட்.SL youth cricket day 1

இருவரும் சேர்ந்து நிதானமாகவும்,திறமையாகவும் ஓட்டங்களைக் குவிக்க இலங்கை அணியால் இவர்களின் இணைப்பைப் பிரிக்க முடியாமல்போனது.

திறமையாக விளையாடிய இருவரும் இலங்கை பந்து வீச்சாளர்களை மிகவும் சோதித்தனர். இருவரும் மூன்றாவது விக்கட்டுக்காக 231 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணியை உச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு 83ஆவது ஓவரில் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமார பார்ட்லட்டின் விக்கட்டைக் கைப்பற்றி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்தார்.

பார்ட்லட் 152 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 131 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய டெல் 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த நிலையில் வெறும் 1 ஓட்டத்தைப் பெற்று டானியலின் பந்து வீச்சிற்கு 88ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின் பொழுது போப் 10 ஓட்டங்களுடனும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வெஸ்ட்பரி தனது நிதான துடுப்பாட்டத்தால் 157 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.

மொத்தமாக நேற்றைய நாளில் 96 ஓவர்கள் வீசப்பட்டது. ஆட்ட நேர முடிவின் பொழுது 355 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து இங்கிலாந்து இளைஞர் அணி வலுவான நிலையில் காணப்படுகிறது.

இன்று 27ஆம் திகதி இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி போராடி  வலுவான நிலைக்கு வருமா என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை நேரப்படி இரண்டாம் நாள்  மு.ப.3.30 அளவில் ஆரம்பிக்கும்.

இங்கிலாந்து இளைஞர் அணி (முதல் நாள் முடிவில் ) – 355/4(96)  வெஸ்ட்பரி 154*, பார்ட்லட் 131

லஹிரு குமார 2/71, டேனியல் 1/63, சம்மு அஷான் 1/21