உசைன் போல்ட் வெற்றி

254
usain bolt

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். இவர் 2008 பீஜிங் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்கி்ல் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அடுத்த மாதம் 5ஆம் திகதி ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரிலும் நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் உள்ளார்.

இதற்கு ஏற்ப தன்னை தயார் செய்து வருகிறார். அவ்வப்போது காயம் அவரைத் தொந்தரவு செய்தாலும் அதை சமாளித்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி மாலை சூடினார்.

ஜூலை 1ஆம் திகதி ஜமைக்காவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அப்போது அரையிறுதிப் போட்டியுடன் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதில் யோஹன் பிளேக் 9.95 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார்.

அரையிறுதியோடு விலகியதற்கு தொடைப்பகுதியில் சவ்வு கிழிந்ததே காரணம் என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்த போல்ட், இந்த மாத இறுதியில் லண்டனில் நடைபெற இருக்கும் லண்டன் ஆண்டுவிழா போட்டியில் கலந்து கொண்டு எனது உடற்திறனை நிரூபிப்பேன் என்று கூறினார்.

அதன்படி லண்டன் ஆண்டுவிழா தடகளப் போட்டியில் நேற்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார்.

காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் சிறப்பாக செயற்படுவாரா? என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்தது. ஆனால், போல்ட் பந்தயத் தூரத்தை 19.89 வினாடிகளில் கடந்து முதல் இடம்பிடித்து அசத்தினார்.

பனமா நாட்டின் அலோன்சோ எட்வர்ட் 20.04 வினாடிகளில் கடந்து 2ஆவது இடமும், இங்கிலாந்தின் ஆடம் ஜெமிலி 20.07 வினாடிகளில் கடந்து 3ஆவது இடமும் பிடித்தனர்.

200 மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்றபின் போல்ட் கூறுகையில் ‘‘நான் காயத்தில் இருந்து மீண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் முழு வடிவம் பெறவில்லை. எனக்கு இன்னும் கடுமையான பயற்சி தேவை, ஆனால், காலப்போக்கில் அதைப் பெறுவேன்.

கார்னர் நன்றாக அமையவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இதனை சிறந்த ஓட்டமாக உணர்கிறேன்.

நான் இங்கே வந்து ஓடியதன் மூலம் காயத்தில் இருந்து மீண்டுள்ளேன். தற்போது எனக்கு காயம் இல்லை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக்கொள்ள நான் தயார்.

முக்கியமான விஷயம் காயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். நான் எப்போதும் லண்டனில் ஓடுவதை விரும்புவேன். இந்த மைதானம் எனக்கு சிறந்ததாக அமைந்துள்ளது” என்றார்.