இந்தியா- நியூசிலாந்து பகலிரவு டெஸ்ட் போட்டி இரத்து

310
Day-Night Test

அவுஸ்திரேலியா அணி முதன்முதலாக கிரிக்கெட் வரலாற்றில் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான “பிங்க்” பந்து பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தியது.

அவுஸ்திரேலியாவிற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மார்தட்டும் பிசிசிஐ, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டது. இதற்கு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணியே சிறந்தது என்று எண்ணியது.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றைப் பகல்- இரவு போட்டியாக நடத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் போட்டியை கொல்கத்தாவில் நடத்தவும் விரும்பியது.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் நியூசிலாந்து முதலில் சம்மதம் தெரிவிப்பதுபோல் இருந்தது. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இந்தியாவின் சூழ்நிலை குறித்து அச்சம் நிலவியது. கொல்கத்தாவில் ஒக்டோபர் மாதம் பனி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் பகல்-இரவு போட்டியை நடத்துவது சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பியது.

இதற்கிடையே இந்தப் போட்டிக்கு முன்னோட்டமாக மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த பரிசோதனை நடத்தியது.

இந்நிலையில்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 2ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் பகல்- இரவு போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் கொல்கத்தா போட்டி “பிங்க்” பந்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

அத்தோடு இந்தப் போட்டித் தொடருக்கான அட்டவணை இன்று பி.சி.சி.ஐ. மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி (22 முதல் 26 வரை) கான்பூரில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் 30ஆம் திகதி (30 முதல் ஒக்டோபர் 4-வரை) கொல்கத்தாவில் தொடங்குகிறது. 3ஆவது மற்றும் கடைசிப் போட்டி ஒக்டோபர் 8ஆம் திகதி (8 முதல் 12 வரை) இந்தூரில் தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து 16ஆம் திகதி முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி தரம்சாலாவிலும், 2ஆவது ஒருநாள் போட்டி 19ஆம் திகதி டெல்லியிலும், 23ஆம் திகதி 3ஆவது போட்டி மொகாலியிலும், 26ஆம் திகதி 4ஆவது போட்டி ராஞ்சியிலும், ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி 29ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும் நடக்க இருக்கிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்