பாடசாலை மட்டக் கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆரம்பம், எதிர்பார்த்த அணிகள் வெற்றி

409
Chox U19 First round round up tamil

கொத்மலேயின் அனுசரணையுடன் நடாத்தப்படும்  ‘கொத்மலே சொக்ஸ்‘ 19 வயதிற்குக் கீழான பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்துத் தொடரின் முதலாம் கட்ட சுற்றுப்போட்டிகள் இம்மாதம் ஆரம்பமானது.

புனித பீட்டர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி  2-2 மேரி ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

போட்டித்தொடரின் முதல் போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியும் மேரி ஸ்டெல்லா கல்லூரி அணியும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின.

போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய மேரி ஸ்டெல்லா கல்லூரி முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டது. தத்சர பெர்னாண்டோ மற்றும் நிசல் தரிந்த ஆகியோர் கோல்களைப் போட்டனர். எனினும் சளைக்காமல் போராடிய புனித பீட்டர்ஸ் கல்லூரி இரண்டாவது பாதியில் 2 கோல்களைப் போட்டு போட்டியை சமநிலைப்படுத்தினர். மொஹமட் ஷபீர் தனது அணிக்காஹா இரண்டு கோல்களையும் போட்டார்.

சிறப்பாட்டக்காரர்- மொஹமட் ஷபீர்


ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரி, கொழும்பு 5-0 ஆனந்த கல்லூரி, கொழும்பு

மாளிகாவத்தை P.D.சிறிசேன மைதானத்தில் பலம் பொருந்திய ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரி அணி ஆனந்த கல்லூரியை எதிர்த்துப் போட்டியிட்டது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரி முதல் பாதியில் இரண்டு கோல்களைப் போட்டது. அமான் முதலாவது கோலையும் கீத்திகே சந்தருவன் இரண்டாவது கோலையும் போட்டனர்.

இரண்டாவது பாதியிலும் தமது சிறப்பாட்டத்தை தொடர்ந்த ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியிற்கு 73வது, 79வது, 83வது நிமிடங்களில் முறையே அபிசயன், மொஹமட் சஜித் மற்றும் அமான் கோல்களைப் போட்டு அசத்த  5-0 என ஆனந்த கல்லூரி தோல்வியைத் தழுவியது.

சிறப்பாட்டக்காரர்- மொஹமட் சஹான்


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 2-1 புனித மேரிஸ் கல்லூரி, நீர்கொழும்பு

பாடசாலை கால்பந்து மட்டத்தில் பெயர் பெற்ற இரு அணிகளும் CR & FC மைதானத்தில் சந்தித்துக் கொண்டன.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் சகிதம் போட்டனர். புனித மேரிஸ் கல்லூரி சார்பாக சிஹான் பெர்னாண்டோவும் புனித ஜோசப் கல்லூரி சார்பாக சசிந்த மதுரங்கவும் கோல்களைப் போட்டனர். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கத்துடன் தமது சிறப்பாட்டத்தை வெளிக்காட்டினர். இறுதியில் சசிந்த மதுரங்க கோலோன்றைப் போட்டு புனித ஜோசப் கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார்.

சிறப்பாட்டக்காரர்- சமிந்த பெரேரா


ஹெர்மன் மெய்னர் கல்லூரி, பிலியந்தலை 4-2 புனித தோமஸ் கல்லூரி, மாத்தறை

மாத்தறை, கால்பந்து சம்மேளன மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் புனித தோமஸ் கல்லூரி அணியும் ஹெர்மன் மெய்னர் கல்லூரி அணியும் மோதின.

போட்டியின் முதலாவது கோலைப் புனித தோமஸ் கல்லூரியின் ஷமிந்து இஷார போட்டார். எனினும் ஹெர்மன் மெய்னர் கல்லூரியின் இமரங்க மற்றும் விதுர தீக்ஷன கோல்களைப்  போட்டனர். இரண்டாவது பாதியில் மேலும் சிறப்பாக விளையாடிய ஹெர்மன் மெய்னர் கல்லூரி சார்பில் துலான் கோலோன்றைப் போட்டார். இறுதி நிமிடங்களில் புனித தோமஸ் கல்லூரியின் ஹிமால் சிதார கோலொன்றைப் போட்டாலும் இமரங்க தனது இரண்டாவது கோலைப் போட்டு ஹெர்மன் மெய்னர் கல்லூரியின் வெற்றியை உறுதிசெய்தார்.

சிறப்பாட்டக்காரர்- அஞ்சன இமரங்க


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 5-0 தர்மாதுத்த கல்லூரி, பதுள்ள

பலம் பொருந்திய புனித ஜோசப் கல்லூரி அணி தர்மாதுத்த கல்லூரி அணியைப் பதுள்ள வின்சன்ட் டயஸ் மைதானத்தில் சந்தித்தது.

முதலாவது பாதியில் இரு அணிகளும் கோல் போடத் தவறினர். எனினும் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய புனித ஜோசப் கல்லூரி 5 கோல்களைப் போட்டு வெற்றி கண்டது. புனித ஜோசப் கல்லூரி சார்பாக சசிந்த மதுரங்க 2 கோல்களையும் ஜேசன் பெர்னாண்டோ மற்றும் அசேல மதுஷான் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர். தர்மாதுத்த கல்லூரி கல்லூரியின் தடுப்பாட்டக்காரர் விட்ட தவறின் மூலம் ஒருஓன் கோல்’ புனித ஜோசப் கல்லூரிக்கு இலவசமாகக் கிடைத்தது.

சிறப்பாட்டக்காரர்- சசிந்த மதுரங்க


லும்பினி கல்லூரி, கொழும்பு 7-1 ஸ்ரீ பாத கல்லூரி, ஹட்டன்

வெள்ளவத்தை குரே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் லும்பினி கல்லூரி அணியும் ஸ்ரீ பாத கல்லூரி அணியும் போட்டியிட்டன.

முதலாவது கோலை ஸ்ரீ பாத கல்லூரியின் தேஷான் தினுவர போட்டார். எனினும் சுதாரித்து விளையாடிய லும்பினி கல்லூரி 7 கோல்களைப் போட்டு இலகு வெற்றியைப் பதிவு செய்தனர். லும்பினி கல்லூரியின் ஜனித் சாமரஹட் ட்ரிக்” கோல் அடித்து அசத்தினார். மேலும் மலிங்க மதுஷான் 2 கோல்களையும்  பசிந்து ஹசந்த ஒரு கோலையும் போட்டார். ‘ஓன் கோல்ஒன்றும் போடப்பட்டது. ஹட்  ட்ரிக் வீரர் ஜனித் சாமர சிவப்பு அட்டை வழங்கப் பெற்று வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பாட்டக்காரர்- மலிங்க மதுஷான்

முதலாம் கட்டப் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும். அகில இலங்கை ரீதியிலாக நடைபெறும் இப் போட்டித்தொடரானது  பாடசாலை மட்டத்தில் பெயர் பெற்ற அணிகளுக்கிடையிலான போட்டித்தன்மையை காண்பிப்பது மட்டுமல்லாது இளம் கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் மிகப்பெரிய ஒரு களமாகவும் அமைகின்றது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்