இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற நிலையில் வென்றுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை டர்ஹம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.

சாதனை படைத்தார் குக்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் கவனயீனமற்ற களத்தடுப்பு மற்றும் 2 பிடியெடுப்புகளைத் தவறவிட்டதன் காரணமாக முதல் இனிங்ஸில் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

இதற்கிணங்க இங்கிலாந்து அணி 132 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் 7ஆம் இலக்க வீரராக களமிறங்கிய மொயின் அலி மிக அற்புதமாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 155 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர அலெக்ஸ் ஹேல்ஸ் 83 ஓட்டங்களையும், ஜோ ரூட் 80 ஓட்டங்களையும்,ஜொனி பெயார்ஸ்டோ 48 ஓட்டங்களையும் பெற்றனர்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கட்டுகளையும், மிலிந்த சிறிவர்தன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின் தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 35 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்ன 19 ஓட்டங்களையும், கவ்ஷால் சில்வா 13 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 4 விக்கட்டுகளையும் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஜெமி என்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும்  கைப்பற்றினார்கள்.

இதன் பின் 397 ஓட்டங்கள் இங்கிலாந்தை விட முதல் இனிங்ஸில் பின்னிலையில் இருந்த இலங்கை அணி “Follow on” முறைக்கு உட்படுத்தப்பட்டு தமது இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்தது. இரண்டாவது இனிங்ஸின் ஆரம்பம் முதல் இலங்கை அணி வீரர்கள் மிக நிதானமாகப் பந்து மட்டைக்கு அருகில் வரும்வரை பொறுமையாக இருந்து அவதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அத்தோடு சீரான இணைப்பாட்டங்களையும் பகிர்ந்தார்கள். இதன் மூலம் இலங்கை அணி  3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சம்பியனான ஹைதராபாத் இன்னுமொரு சாதனை

பின் நான்காவது நாளான இன்று தமது ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி ஆரம்பத்திலேயே மிலிந்த சிறிவர்தனவின் விக்கட்டை இழந்தது. அதன் பின் டினேஷ் சந்திமல்லுடன் ஜோடி சேர்ந்த ரங்கன ஹேரத் நிதானமான பொறுமைமிகு ஆட்டத்தைக் கடைபிடித்தார்.  சிறப்பாக விளையாடி ஓட்டங்களைப் பகிர்ந்த இந்த ஜோடி இலங்கை அணியை  இனிங்ஸ் தோல்வியில் இருந்து மீட்டது. அருமையாக விளையாடிய உபதலைவர் தினேஷ் சந்திமல் டெஸ்ட் போட்டிகளில் 6ஆவது சதத்தைப் பெற்றார். அவரோடு துணையாக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் தனது டெஸ்ட் வாழ்வில் 2ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த ஜோடி 7ஆவது விக்கட்டுக்காக சுமார் 28 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடி 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.

அதன் பின் 61 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் ஆட்டம் இழக்க இலங்கையின் விக்கட்டுகள் விழ ஆரம்பித்தது. இறுதியில் இலங்கை அணி 128.2 ஓவர்களில் 475 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் 2ஆவது இனிங்ஸில் தினேஷ் சந்திமால் 126 ஓட்டங்களையும், தலைவர் மெதிவ்ஸ் 80 ஓட்டங்களையும், கவ்ஷால் சில்வா 60 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கட்டுகளையும், க்றிஸ் வோக்ஸ் 2 விக்கட்டுகளையும், ஸ்டுவர்ட் ப்ரொட், மொயின் அலி மற்றும் ஸ்டீவன் பின் ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு போட்டியில் வெற்றி பெற 79 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கிற்காகத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 23.2 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 80 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றது. இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 11 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மிலிந்த சிறிவர்தனவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார். இவரைத் தவிர தலைவர் எலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 47 ஓட்டங்களையும் நிக் கொம்ப்டன்  ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

ஐ.பி.எல் வரலாற்றில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர்

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் தெரிவு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தாலும் பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளாகி இருந்த துடுப்பாட்டம் 2ஆவது இனிங்சில் நல்ல நிலைக்கு  இருந்தமை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு அது ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த 2அவது போட்டியில் 2 வீரர்கள் புதிய மைல்கல்லை எட்டியிருந்தனர். அதில் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் 300ஆவது விக்கட்டைக் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியிருந்தார். அத்தோடு இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் இளம் வயதில் 10,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையையும், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்