இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி யின் 3ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாகப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9  விக்கட்டுகளை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

கெயில்,கொஹ்லி அசத்தல் வீணானது; சம்பியனானது ஹைதராபாத்

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் 7ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய மொயின் அலி மிக அற்புதமாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 155 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர அலெக்ஸ் ஹேல்ஸ் 83 ஓட்டங்களையும், ஜோ ரூட் 80 ஓட்டங்களையும்,ஜொனி பெயார்ஸ்டோ 48 ஓட்டங்களையும் பெற்றனர்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கட்டுகளையும், மிலிந்த சிறிவர்தன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

பின் தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின் இன்று தமது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 35 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்ன 19 ஓட்டங்களையும், கவ்ஷால் சில்வா 13 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 4 விக்கட்டுகளையும் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஜெமி என்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும்  கைப்பற்றினார்கள்.

இதன் பின் 397 ஓட்டங்கள் இங்கிலாந்தை விட முதல் இனிங்ஸில் பின்னிலையில் இருந்த இலங்கை அணி “Follow on” முறைக்கு உட்படுத்தப்பட்டு தமது இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்தது. இரண்டாவது இனிங்ஸின் ஆரம்பம் முதல் இலங்கை அணி வீரர்கள் மிக நிதானமாக பந்து மட்டைக்கு அருகில் வரும்வரை பொறுமையாக இருந்து அவதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அத்தோடு சீரான இணைப்பாட்டங்களையும் பகிர்ந்தார்கள். இதன் மூலம் இலங்கை அணி  3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணியின்  இரண்டாவது இனிங்ஸில் தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் முன் நின்று சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் வெளிச்சென்ற பந்துக்கு மட்டையைப் போட்டு தனது விக்கட்டைப் பரிசளித்தார். இவர் சிறப்பாக விளையாடி 80 ஓட்டங்களையும், கவ்ஷால் சில்வா 60 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமல் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்த்தன ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி 5 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க இன்னும்  88 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இரண்டாவது இனிங்ஸில் முன்னைய இனிங்ஸை விட இலங்கை அணியின் துடுப்பாட்டம் சிறப்பாகவும் நிதானமாகவும் இருந்தமையால் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு அது ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்