இந்தியக் கிரிக்கட் வாரியத்தின் தலைவராகத் தாகூர்

213
Anurag Thakur takes over as BCCI president

இதுவரை காலம் இந்தியக் கிரிக்கட் வாரியத்தின் செயலாளராக செயற்பட்ட அனுராக் தாகூர் தற்போது இந்தியக் கிரிக்கட் வாரியத்தின் புதிய தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய கிரிக்கட் வாரியத்தில் தலைவராக இணையும் 34ஆவது நபராவார். அத்தோடு இவரது பதவிக்காலம் 2017ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் (.சி.சி.) தலைவராக ஷசாங் மனோகர் சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் திருத்தப்பட்ட விதிப்படி இந்தப் பதவிக்கு வருபவர்கள் இந்திய  கிரிக்கட் வாரியத்தில் எந்தப் பொறுப்பையும் வகிக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கட் வாரியத்தின் தலைவர் பதவியை ஷசாங் மனோகர் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இந்திய கிரிக்கட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.  இதில் இந்திய கிரிக்கட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சுழற்சி அடிப்படையில் இந்த முறை தலைவர் பதவி கிழக்கு மண்டலத்திற்குரியது. பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யான அனுராக் தாகூருக்கு கிழக்கு மண்டலமான பெங்கால், அசாம், ஜார்கண்ட், திரிபுரா மற்றும் தேசிய கிரிக்கட் கழகம் ஆகிய உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் 41 வயதான அனுராக் தாகூர் இந்திய கிரிக்கட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற பெருமையைப் பெறவிருக்கிறார்.

அனுராக் தாகூர் தலைவரானதும், காலியாகும் செயலாளர் பதவிக்கு மராட்டிய கிரிக்கட் சங்கத் தலைவர் அஜய் ஷிர்கே தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்