தோற்பட்டையில் காயம் அடைந்துள்ள இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி தாயகம் திரும்பவுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பதிலாக கடந்த வாரம் ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேராவை இலங்கை டெஸ்ட் குழாமில் இணைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு ஆலோசிக்கிறது.

இது தொடர்பாக நேற்று மாலை இலங்கை கிரிக்கட் சபையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் அணிக்கு சேர்க்கப்பட மிகவும் தகுதியான வீரர் குசல் தான் என்று தீர்மானிக்கப்ட்டுள்ளதோடு அவரை எதிர்வரும் தினங்களில் இங்கிலாந்தில் உள்ள இலங்கை அணியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கட் தெரிவாளர் குழு தலைவர் சனத் ஜயசூரிய கூறுகையில் “தம்மிக்க பிரசாத்திற்கு பதிலாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை நியமிக்க நமக்கு யோசனை இல்லை.இலங்கை குழாமில் பிரசாத் இல்லாமல் இருந்த போதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் 6 பேர் உள்ளனர். அதனால் அவருக்கு பதிலாக வேறொரு வேகப்பந்து வீச்சாளரை நியமிக்க நாம் எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பில் நமது தெரிவாளர் குழு தீர்மானம் எடுப்போம்” என்று கூறியுள்ளார்.

தாயகம் திரும்புகிறார் பிரசாத்

தம்மிக பிரசாத் தவிர இலங்கை அணியில் ஷாமிந்த எறங்க, நுவான் பிரதீப், துஷ்மன்த சமீர, டசுன் ஷானக, சுரங்க லக்மால் மற்றும் எஞ்சலோ மெதிவ்ஸ் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

ஜயசூரிய மேலும் பேசுகையில் “ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேராவை இங்கிலாந்து தொடரில் இணைக்க உத்தேசமுள்ளது. இது தொடர்பிலும் நாம் அவதானிக்கிறோம், இப்போது இருக்கும் நிலையில் அணிக்கு மிகவும் தகுதியான வீரரை நாம் கலந்து ஆலோசித்து தீர்மானிப்போம். அது குசலாகவோ அல்லது வேறொரு வீரராகவோ இருக்கலாம். ஆனாலும் குசல் தொடர்பாகவும் ஆலோசித்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

சுமார் 4 மாதங்களுக்கு கிரிக்கட்டில் ஈடுபடாத குசல் கடந்த வாரம் மீண்டும் பயிற்சிகளில் இணைந்தார். அவர் கடந்த நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியுசிலாந்து சென்று இருந்த போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் இலங்கை அணியில் இருந்து விலகி மீண்டும் தாயகம் திரும்பினார்.

உப தலைவர் தினேஷ் சந்திமல் ஒரு துடுப்பாட்ட வீரராகவும் அணியின் விக்கட் காப்பளாராகவும் செயற்பட்டு வருகிறார். அதனால் துடுப்பாட்டத்தில் அவரது முழு பங்களிப்பை பெற இலங்கை அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கட் காப்பாளரை இணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் குசல் பெரேரா அணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

தனது 25ஆவது வயதில் கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக குசல் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அவர் விளையாடிய முதல் போட்டியின் இரு இனிங்ஸிலும் அரைச்சதம் அடித்தார். முதல் இனிங்ஸில் 55 ஓட்டங்களையும் இரண்டாவது இனிஙஸில் 70 ஓட்டங்களையும் அவர் பெற்றார்.

இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குசல் பெரேரா 33.80 என்ற துடுப்பாட்ட சராசரியில் 169 ஓட்டங்களை பெறுள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டங்கள் 70 ஓட்டங்களாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்