Friday 15 January 2016

பித்தளைத்தகடு - குறும் கதை



இருபது வருட காலமாக இருந்துவந்த உயர் பாதுகாப்பு வலயம்’  நீக்கப்பட்டது. மக்கள் ஊருக்குச் சென்று காணி பூமிகளைத் துப்பரவாக்கினார்கள். வீடுகளைத் திருத்திக் கட்டினார்கள்.

வீரபத்திரர் கோவில் அரசமரமும் மணிக்கோபுரமும் ஷெல் அடியினால் சேதமடைந்து இருந்தது. கோவில் கட்டடத்திற்கு  எந்தவித பாதகமும் இல்லை. இருந்தும் கோவில் விக்கிரகங்கள் களவு போய்விட்டன. ஆமிக்காம் அருகில் இருந்தபடியால் அவர்கள் கோவில் கிணற்றைப் பாவித்திருக்க வேண்டும். கிணற்றுநீர் சுத்தமாக இருந்தது.
இந்த வருடம் சித்திரா பெளர்ணமிக்குப் போகவேண்டுமென சுபாஷ் நினைத்திருந்தான். அவனுக்கு நன்றாக நினைவிருந்தது, இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு சித்திரை மாதத்தில்தான் எல்லோருமே ஊரைவிட்டு ஓடிப்போனார்கள்.
அரசமரத்தில் லவுட்ஸ்பீக்கர் கட்டி, கிராமபோனில் பக்திப்பாடல்கள் இசைக்க – சித்திரா பெளர்ணமிக் கஞ்சி, மடை, அன்னதானம், தீ மிதிப்பு, உரு ஆட்டம் என்று கோவில் களைகட்டியிருந்தது. அது நடந்து சில நாட்களில் ஊர் வெறுமையாகியது.

சுபாஷ் மனைவி திலகா சகிதம் கனடாவில் இருந்து வந்து, தெல்லிப்பழையில் இருக்கும் தனது நண்பனின் வீட்டில் தங்கினான்.
வீரபத்திரர் கோவில் அவனது கொள்ளுத்தாத்தா வல்லிபுரமும், அவரின் சகோதரர்களும் சேர்ந்து கட்டிய கோவில். வருடாவருடம் கதிர்காமக் கந்தனிடம் கால்நடையாகப் போய் வருபவர்கள் அவர்கள். சித்திரா பெளர்ணமி திருவிழாவில் அவர்களின் பரம்பரையினரே முன்னுரிமை பெற்று வந்தார்கள். நவராத்திரி திருவெம்பாவை போன்ற ஏனைய பூஜைகள் கோவிலைச் சுற்றி இருப்பவர்கள் முறை வைத்து மாறி மாறிச் செய்து வந்தார்கள்.

சுபாஷும் மனைவியும் அங்கு போய்ச் சேர்ந்தபோது, அறிமுகம் இல்லாத வேறு சிலரும் பொங்கிக் கொண்டிருந்தார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களில் பலரைக் காணவில்லை. புலம்பெயர்ந்து போகாமல் நாட்டில் இருந்தவர்களால் கோவில் வளவு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. பழைய ஐயர் பொன்னுச்சாமி இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டன. அவரின் உறவு வழியிலான ஒருவர் பூஜைக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்.

முன்பு கோவிலுக்கென்று ஒரு பரிபாலனசபை இருந்து வந்தது. ஊரவர்கள் மாறி மாறி அதில் அங்கம் வகித்தார்கள். கந்தையா மாஸ்டர்தான் பலதடவைகள் அதில் தலைவராக இருந்துள்ளார். அவரது மகன் ராஜேஸ்வரன் கிளிநொச்சியில் இருந்து வந்திருந்தான். அவனது தலைமையில் பொங்கல் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது.

கோவிலில் விக்கிரகங்கள் இல்லாதபடியால் ஒரு வீரபத்திரர் படத்தை பிறேம் போட்டு எடுத்து வந்திருந்தார் ஐயர். நீண்ட காலத்தின் பின்னர் நடைபெறும் முதல் பூஜை என்பதால் ஆடம்பரமற்று ஒரு பொதுவான பூஜையாக நடத்துவதற்கு ஐயரும் பொதுமக்களும் விரும்பினார்கள். பூஜைக்கு முன்னர் சிறு கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.
இந்தக் கோவில் கந்தையா மாஸ்டரின் பரம்பரையினரால் கட்டப்பட்டது. அவரது மகன் தொடர்ந்தும் இந்தக் கோவிலைப் பராமரிப்பதற்கான செலவுகளைத் தருவதற்கு உறுதியளித்துள்ளார் என்று ஐயர் தனது கருத்தைத் தெரிவித்தார். அங்கிருந்த ஒருவரும் அவரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.
“கோவில் ஒரு சித்திரை மாதத்தில் எனது அப்பாவின் தந்தையின் தந்தையான வல்லிபுரத்தினாலும், அவரது உறவினர்களாலும் கட்டப்பட்டது. அதனால்தான் சித்திரா பெளர்ணமியில் அவர்களின் வாரிசுகள் தற்பை அணிந்து பூஜை செய்கின்றார்கள்என்று ஐயரின் பேச்சை இடைமறித்துத் தனது கருத்தைச் சொன்னான் சுபாஷ். அவன் சொன்னதை அங்குள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனை அலட்சியம் செய்தார்கள்.

மூலஸ்தானத்தை உற்றுப் பார்த்துக் கவலை கொண்டிருந்த திலகாவின் கண்களில், சுவரின் உச்சியில் இருந்த அந்தப் பித்தளைத்தகடு கவர்ந்திழுத்தது. அந்தப் பித்தளைத்தகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வீரபத்திரரின் இலச்சினை காலமாற்றத்துடன் மங்கித் தேய்ந்திருந்தது. எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோவில் சாட்சி அதுதான். ஐயரைக் கூப்பிட்டு அதைச் சுற்றிக்காட்டினாள். அதையே வைத்து தற்காலிகமாகப் பூஜை செய்தால் என்ன என்று திலகா கேட்டாள். அங்கேயிருந்த பலரும் அவள் சொல்வதை ஆமோதித்தார்கள்.
பெரியதொரு ஏணியை சுவருடன் சாத்தினார்கள். படம் சுவருடன் ஆணி கொண்டு அறையப்பட்டிருந்தது. அதைக் கழற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மிகவும் கஸ்டப்பட்டு அந்தப் படத்தைக் கீழ் இறக்கினார்கள். அந்தப் பித்தளைத்தகட்டில் ஆணியால் கீறப்பட்ட வீரபத்திரரின் திருவுருவம் தெரிந்தது.
ஐயர் அருகே நின்ற ராஜேஸ்வரனின் மகளிடம் அந்தப் படத்தைக் கொடுத்தார். கொஞ்சப் பழப்புளி கொடுத்து அதைத் தேய்த்து மினுக்கி வரும்படி சொன்னார்.
சற்று நேரத்தில் ஐயா என்றபடியே அந்தச் சிறுபெண் பதற்றத்துடன் ஓடி வந்தாள்.
“ஐயா... இந்தப் படத்திற்குப் பின்னால் ஏதோவெல்லாம் எழுதிக் கிடக்குஆச்சரியத்துடன் படத்தின் மறுபுறத்தைக் காட்டினாள் அவள்.
“வீரபத்திரர் கோவில், இது அமைந்துள்ள பன்னிரண்டு பரப்புக் காணி, எட்டுப்பரப்பு பனை வளவு என்பவை கக்கர் வல்லிபுரத்திற்குச் சொந்தமானது. அவரது தமையனார் கதிரேசருக்கு வீரபத்திரர் கனவில் வந்து இந்தக் கோவிலை ஸ்தாபிக்குமாறு கூறிச் சென்றுள்ளார்...என்று தொடர்ந்து வாசித்துக் கொண்டே போனார் ஐயர்.


No comments:

Post a Comment