Wednesday 19 August 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 8



மறுபக்கம்

ஸ்ரீதனம் என்றதும் சீறிப்பாய்கிறார்கள்
பத்திரிகையிலும் வானொலியிலும்.
ஆண்களுங்கூட பெண்களுக்காக
அழகாய் வக்காலத்து வாங்குறார்கள்.
அரசியல் தலைவர்கள் போல்
அடுக்கு மொழியில் அநியாய பழிகள்
அத்தனையும் ஆண்வர்கத்தின் மேல்தான்.

 ஐரோப்பிய தமிழ் இளைஞன் – நான்
அழுதழுது சொல்கின்றேன் – என்
மறுபக்க சோகக் கதைகள்  - கொஞ்சம்
தயவாய் கேளுங்கள்.

முதன் முதலில் பெண் பார்த்த
மூதாட்டி வீட்டு
முன் விறாந்தையில்
முந்தி எழுந்து
தந்தை கேட்டார்
“தம்பி நீர் என்ன சாதி? என்று
தலை குனிந்து வந்துவிட்டேன்.

தரம் பிரித்தலைப் பார்த்து
தாமதித்துச் சில காலம்
தரகரிடம் ஜாதகத்தை கொடுத்தேன்.
ஆறுதலாய் ஆறேழு மாதம் போனபின்
அவரசரமாய் ஓடோடி வந்தார்
அவர் ஒரு பெண் பார்த்து.
“நிரந்தர வதிவிட உரிமை உமக்கிருக்கா?”
வினா தொடுத்தார் பெண் வீட்டில் அண்ணன்.
மனம் உடைந்து நான் மௌனமாகினேன்.

ஆண்டுகள் சில ஓடி மறைந்து
பெண்பார்க்கப் போன இன்னுமோர் இடத்தில்
“சொந்தமாய் வாழ்மனை உமக்கிருக்கா?”
அவ்வீட்டு அக்கா ஏவினார் ஏவுகணை.
 மீண்டும் நான் மௌனமானேன்.

காலம் கடந்து செல்ல செல்ல
கவலையும் வளர்ந்து வளர்ந்து சென்றது.
“காரோட்டத் தெரியுமா?”
அம்பு ஏவினார் அடுத்த வீட்டில் அண்ணி்.
“கார் எதற்கு எனக்கு?
பக்கத்தில்தானே வேலை என்று.”
பதிலோடு காரணமும் சொன்னேன்.
“கலியாணம் செய்த பின்னும் கால்நடையோ தம்பி?
கோவில் திருவிழா திருமணம் என்றால்
கட்டாய தேவை கார் இந்த நாட்டில் என்று
கண்டிப்பாய் சொல்லிவிட்டார்.

“என்ன படித்தீர்கள்?”
என்று சிலர் வீட்டில்
“என்னும் அங்கேதான் வேலையோ?”
என்று வேறு சிலர் வீட்டில் 
ஏளனமாய் விசாரணைகள்.

எப்படியோ எல்லாம் சேர்த்து முடிந்து
கடந்த மாதம் கடைசியாய்
பெண் பார்க்கப் போன வீட்டில்
வெள்ளித் தாம்பாளத்தில்
நீர் ஆகாரம்
நீள்கரங்களால் நீட்டி நின்ற
அழகாய் அலங்கரித்த ஆரணங்கு
“தலைமுடி கொட்டி
பின் மண்டை
வழுக்கையாய் இருக்கே” என்று
என்னைக் கேலி பண்ணி

கொல் என்று சிரித்தாள்.

1 comment:

  1. சொல்லிப் போனவிதமும்
    முடித்த விதமும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete