Monday 12 January 2015

வன்னி / அதிகாரம் 12 / கதிர் பாலசுந்தரம்


நான் அல்லது நீ

'அம்மா. இவ திவ்யா. முந்தியும் சொன்னனான். கனகராயன்குள தில்லையரின் மகள். என்னுடன் விடுதியில் தங்கிப்படிக்கிறா. ஒரே வகுப்பு. ஸ்கொலர்தான்."
அம்மா மற்றப் பெண்ணை ஆழமாய்ப் பார்த்தார். உள்மனம் பேசியது: முழுப்பாவாடை சட்டை போட்டிருக்குது. ஏன் தலைமயிரை வெட்டிப் பொப்பாக்கியிருக்குது? வயசு இருபத்தி நாலுக்கு மேலிருக்கும். நல்ல உயரம். பெரிய இடத்துப் பெண்போல. ஆனைக் குட்டி போல நல்லா விளைந்திருக்குது. குத்துச் சண்டை செய்கிற பிள்ளை போல.

'சிவகாமி, பெரிய பெண்ணின் பெயர்?"

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. திவ்யா எனது நிலைமையைப் புரிந்துகொண்டு பதில் சொன்னார்.
'பெயர் மல்லிகா. ஊர் மீசாலை." ஏலவே மாதவி அக்கா தனது பெயரை மல்லிகா என்று அறிமுகப்படுத்தும்படி சொல்லி  வைத்திருந்தாள்.
அம்மாவுக்கு மல்லிகா பாடசாலையில் படிக்கும் பெண் போல் தெரியவில்லை. உறுதிப்படுத்த வினாவினார். 'மல்லிகாவும் வேம்படிப் பாடசாலையில் படிக்கிறாவோ?"

நான் திவ்யாவைப் பார்த்தேன். திவ்யா என்னைப் பார்த்தாள்.
அம்மாவுக்கு ஏதோ சின்னக் குழப்பம் இருப்பது புரிந்தது. வீட்டுக்கு வந்தவர்களை கௌரவமாக நடத்த வேண்டும் என்ற துடிப்பில்,
'பிள்ளையள் முகம் வாடியிருக்கு. போய் கால்கை கழுவிக் கொண்டு வாருங்கள். காலையில் சாப்பிட்டதாய்த் தெரியவில்லை.இடியப்பம் அவிக்கிறன். தயிரும் பன்றிக் கருக்கல் கறியும் இருக்குது."
முகம் கழுவிக்கொண்டுஎனதுஅறைக்குத் திரும்பினார்கள்.
மாதவி எனது அறையையும், வளவு பின் பக்கம் உள்ள பாதையையும் கவனமாக அவதானித்தார்.
'சிவகாமி. பொலிஸ்காரனுக்கு எனது முகம் தெரியாது. எனது புகைப்படம் எவரிடமும் இல்லை. இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை இன்னும் இரண்டு பொலிசும் ஜபீ ;பிலே தொடருகிறான்கள். மாதவிதான் சுதந்திரப் பறவைகளின் தலைவி என்று தெரியும். யார் மாதவி என்று தெரியாது. வலிய தலையைக் கொடுத்தால்தான் மாட்டுப்பட நேரிடும்."
'மாதவி அக்கா. உங்களுடைய உயரம், பருமன், தலை முடி உங்களைக் காட்டிக் கொடாதா?"
'அதுதான் சிவகாமி எனக்கு உள்ள ஒரே பயம். அல்லாவிட்டால் நான் கையை வீசிக் கொண்டு எங்கேயும் போய் வருவன்."
'இங்கே வரமாட்டான். பயப்படாமல் இருங் கள் அக்கா."
'சொல்ல முடியாது சிவகாமி. இன்ஸ்பெக்டர் ஜோன்பிள்ளை பொல்லாதவன். தமிழினத்தின் அவலத்தில் வாழ நினைப்பவன். இனத் துரோகி. பதவி உயர்வுக்காக எதையும் செய்வான். என்னைத் தேடுவதுதான் அவன் தொழில். பதவி ஏறும். பட்டி ஏறும். எப்படியும் அலுக்காமல் தேடுவான்."

உணவு முடிந்து மாட்டுத் தொழுவத்தில் மரக் குத்திகளில் அமர்ந்திருந்தோம்.
'மாதவி அக்கா, நான் இயக்கத்துக்குப் போய்விடுவேன் என்று வீட்டில் அப்பாவும் அம்மாவும் அழுது புலம்பியபடி. அம்மா அடிக்கடி சுவாமிப் படத்துமுன் நின்றுகண்ணீர்விடுறா."
'திவ்யா, என்ன முடிவாய் செய்யப் போறாய்?"
'மாதவி அக்கா, வாகனத்தில் பிரயாணம் செய்கிற சமயம். விபத்தில் இறந்தால் என்ன செய்வார்கள்? இரண்டு நாளைக்குத் தலையிலே அடியடியென்று அடித்து அழுவார்கள். நிலத்திலே விழுந்து புரண்டு அடித்து ஒப்பாரி வைப்பார்கள். நாள் நகரநகர மரணத்தை ஏற்றுக்கொள்வார்கள். இயற்கை. காலகதியில் மனம் சாந்தி அடையும். காலம் புண்ணை ஆற்றிவிடும். எங்கள் மாமா காசிநாதர் கொழும்பில் கிளாக். கிளாஸ் ரூ. வயசு இருபத்தெட்டு. விவாகம் செய்து ஆறு மாதம். 1983 கறுப்பு ஆடிக் கலவரத்தில்  பொறளையில் வைத்து அடித்துக் கொன்றவன்கள். அறுவான்கள் அடிச்சுக் கொன்றவன்கள். சிங்களவனில் ஐம்பது பேரையாவது கொல்ல வேணும். அவன்கள் குடும்பங்கள் கதற வேணும். பழிக்குப்பழி." திவ்யா.
'திவ்யா. உன்னைப் போலத்தான் தமிழ் சமூகம் முழுவதும் சிங்களவனைப் பழிவாங்கத் துடிக்குது. இளைய தலைமுறைச் சமூகத்தைப் பார்க்கப் பெருமை பொங்கிறது. உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்ய அணிவகுத்து நிற்கிறார்கள். எங்கள் சமுதாய வரலாற்றிலே, ஒரு தலைமுறையினர் ஒட்டுமொத்தமாக இனவிடுதலைக்காக போர்க்களத்தில் குதித்து போராடுவது இதுவே முதல்முறை. தமிழ் மக்கள் வரலாற்றில் ஈடிணையற்ற பெரும் எழுச்சி.புறநாநூற்றிலும் இப்படி ஒரு பதிவு இல்லை. நிட்சயம் தமிழ் ஈழம் மலரும்." மாதவி.

வீதியில் வாகனம் வரும் ஓசை. மூவரும் திகைத்து உசாராகினோம். ஆயிலடி கிறவல் வீதியில் வாகனங்கள் காட்சி கொடுப்பதில்லை.
எருவேற்றுகிற யாழ்ப்பாண லொறி.

'சிவகாமி, எனக்கு இந்த இடம் பாதுகாப்பாய்த் தெரியவில்லை. முன்னுக்கு சனசமூக நிலையம் தெரியுது. பேப்பர் புத்தகம் வாசிக்க நிறைய பேர் வாறவையே?"
'இல்லை அக்கா. பேப்பர், புத்தகம் எதுவும் இல்லை. பெயர்தான் சனசமூக நிலையம். பெரிய பெயர்ப் பலகை. பாடசாலையில் ஆசிரியர் விடுதி கட்ட முன்னர், ஆசிரியர்கள் தங்கிய இடம். உள்ளே நல்ல வசதி. படுத்தெழும்பலாம். மேசைகதிரை உண்டு."
'பின் பக்கத்தில் கதவு?"
'இல்லை." சிவகாமி.
'பரவாயில்லை. நாங்கள் அங்குதான் பொழுது போக்க வேணும். இரவு படுக்கையும் அங்கேதான். பின் புறம் பெரிய காடு.தேவைஏற்படின் காட்டுள் புகுந்து விடலாம்."

'மாதவி அக்கா, தற்செயலாக நாங்கள் நித்திரை கொள்கிற சமயம் பொலிஸ் வந்து தட்டி எழுப்பினால்?" நான் வினாவினேன்.
திவ்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.
'திவ்யா, சிரிக்கிற தருணம் இல்லை. சீரியசாசிந்திக்க வேணும். என்னோடு சேர உங்களையும் பொலிஸ் தூக்கும். உதைக்கும். அத்தோடு நில்லாது."
மாதவி அக்காவை வைத்தகண் எடுக்காமல் பார்த்தோம். எங்களுக்குப் புரிந்தது. மாதவி அக்காவுக்கு வீசுகிற சுருக்கு எங்கள் கழுத்திலும் விழும் என்று.
'மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கையில் எப்போதும் ஏதன் ஆயுதம் இருக்கவேணும். அலவாங்கோ கோடரியோ எதுவென்றாலும். பொலிஸ் கொண்டு போனால்---நாங்கள் குமர்கள்---கேவலந்தான் எஞ்சும். தற்செயலாக பொலிஸ் நித்திரையில் தட்டி எழுப்ப நேர்ந்தால், பொலிசை மடக்கி ஆளை முடிக்கப் பார்க்க வேணும். மரணப் போர் நடக்க வேணும். அந்தப்பயிற்சி விரைவில் தருவேன். வெற்றி அல்லது வீரசொர்க்கம். எமது தாரகமந்திரம்."

மூவரும் சனசமூக நிலையத்துக்குப் போனோம். உட்பகுதியை மட்டும் துப்பரவு செய்தோம். பென்னாம் பெரிய பாம்பு ஒன்று உக்கிய மரப்பெட்டிக்குள்ளால் தலையை நீட்டியது. மாதவி அக்கா தலையில் கோடரியால் அடி போட்டா. வெங்கணாந்தி. கயிறுகட்டி இழுத்துச் சென்று வீசினோம். அன்றிரவு அங்குதான் விடுதி.
அடுத்த தினம் ஞாயிறு நண்பகல். கிழக்கே பாடசாலையில் எந்தவித அசுகையும் இல்லை. வீதியிலும் நடமாட்ட மில்லை. காட்டு வெக்கை ஆட்சி பண்ணியது. அம்மா முருகன் கோவிலில். அப்பா வயலில் விதைப்புவேலை. நாங்கள் சனசமூக நிலையத்துள்.

இந்தியாவில் அண்ணா மாவட்டம் சிருமலையில் அமைந்த புலிகளின் பெண்களுக்கான பயிற்சி முகாமுக்கு எங்களை அனுப்புவதுபற்றி மாதவி அக்கா பேசிக் கொண்டிருந்தார்.

வாகன ஓசை தூரக் கேட்டது. மனம் பதறியது. ஓசை ஓய்ந்தது. புரியாமல் ஆளைஆள் பார்த்தோம். 'எரு ஏத்துகிறலொறியோ?" 'இல்லை அக்கா. மெல்லிதாய் சீராய் ஒலிக்கிறது. காராயிருக்கும்." ஓசை மீண்டும் கேட்டது. மெல்ல மெல்ல வாகன ஓசைநெருங்கி வந்தது.
கனகராயன்குள பக்கமிருந்து வந்து எங்கள் வளவு வாசல் பாரிய இரும்புக் கேற் முன் நின்றது. ஜீப். பெரிய எழுத்தில் பொலிஸ் என்று எழுதியிருந்தது. கண்கள்உருண்டுசிவந்து மிரண்டன.

பொலிஸ்காரன் ஒருவன் வாகனத்தின் பின் பக்கத்தால் பாய்ந்து இறங்கினான். தலையில் தொப்பி இல்லை. சிவில் உடை. கேற்றைத் திறந்து எங்கள் வீட்டுக்கு விறுவிறென்று நடந்து போனான்.
கதவு பூட்டியிருந்தது. ஓங்கித் தட்டிப் பார்த்தான். 'வீட்டுக்காரர், வீட்டுக்காரர்." கூப்பிட்டுப் பார்த்தான். வரவேற்பறை திறந்த சாளரம் ஊடாய்ப் பார்த்தான். வீட்டின் பின்பக்கம் சென்றான்.அலவாங்கால் பின்பக்க ஜன்னல்களைத் தெண்டித் திறந்தான். யாரும் இல்லை.
சாரதி ஆசனத்தில் ஒருவன். பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான். சிங்களப் பத்திரிகை.
இன்ஸ்பெக்டர் ஜோன் பிள்ளை வாகன முன் ஆசனத்தில். சனசமூக நிலையத்தைச் சற்று நேரம் தொடர்ந்து பார்த்தார். வாகனத்தால் இறங்கினார்.
சிவில் உடை. கறுப்பு நீளக் காற்சட்டை. வெள்ளை சேட்.பெரிய உயரமில்லை. ஐம்பது வயதிருக்கும். மண்டை உச்சிப்பொட்டில் மயிர் இல்லை. சாதாரண உடம்பு. சனசமூக நிலையத்தை நோக்கி நிமிர்ந்து நடந்து வந்தார். கண்கள் கதவில் குத்தி நின்றன.

மாதவி அக்கா கைப்பாசையில் கட்டளையிட்டார். நெஞ்சு வேகமாக அடித்தது. ஐம்பது சிங்களவனையாவது கொல்ல வேண்டும் என்ற வெறி பயத்தைப் போக்கியது. கொண்டு போனால் அவமானம். மாதவி அக்கா என்ன செய்யப் போறா?

ஜோன்பிள்ளை கதவைத் திறந்து, வலது காலை உள்ளே வைத்து இடதுகாலை மேலே தூக்கினார். கோடரி இரும்புப் பிடரியால் கணுக்காலில் அடி. குப்புற விழுந்தார். பிடரியில் பலமான அடி. சிறிய அனுங்கல். தலையில் பிடித்து இழுத்து அறையின் உள்ளே போட்டுவிட்டு, அவனது பிஸ்ரலுடன் வந்தார்.
ஓடி வரும் முயலை எதிர்பார்த்து, தங்கலில் காத்திருக்கும் புலி போல, மாதவி அக்கா கோடரியுடன் காத்திருந்தார்.
வீட்டைப் பார்த்து அங்கு ஒருவரும் இல்லை என்று தெரிந்துகொண்ட பொலிஸ் சாஜன் கமலநாதன் வாகனத்துக்குத் திரும்பினார்.
'சுபசிங்கா, எங்கே இன்ஸ்பெக்டர் மாத்தையா?"
கையைநீட்டி 'அந்தக் கட்டிடத்துள் நிற்கிறார்" என்றான்.

சாஜன் கமலநாதன் சனசமூக நிலையத்தை நோக்கி
வந்தார். கதவைத் திறந்து ஒரு கால் வைத்தார். ஜோன்பிள்ளைக்கு
நடந்த அதே வரவேற்பு.உடலைபிடித்து இழுத்து அறையின் உள்ளே
போட்டார் மாதவி அக்கா.
வாகனச் சாரதி சுபசிங்க ஏன் வரச் சுணங்குது? என்று தன்னைத்தானே விசாரித்துக்கொண்டு வந்து சனசமூக நிலையத்துள் படு வேகமாய்ப் புகுந்தான்.
மாதவி அக்காவின் குறி தப்பிப்போனது. அவன் எங்கள் எதிரே நின்றான்.
சுபசிங்க மாதவி அக்காவையும், எங்களையும் கண்டு மிரண்டான். மாதவி அக்காவின் கோடரி வீச்சுக்குத் தப்பிய அவன் கோடரியைப் பார்த்தான். திரும்பி ஓட ஆயத்தம். மாதவி அக்கா பிஸ்ரலை நீட்டிப் பிடரியைக் குறி பார்த்தார். உள்ளங் காலில் நின்று உடல் அசைந்துவிட்டு தொப்பென விழுந்தது. மாதவி அக்கா அவனை இழுத்து அறையினுள் போட்டு கதவைச் சாத்தினார்.

'விரைவாகச் செயற்பட வேண்டும். உங்களையும் உயிரோடு விடமாட்டார்கள். ஜீப்பை எடுத்துக் கொண்டு ஒடுவம். எந்த அடையாளமும் விடாமல் பொறுக்கி பையில் எடுங்கள்."
'அக்காஜீப்ஓடுவீங்களா?" திவ்யா.
'ஓடிப் பார்ப்பம். அதற்கு முதல் கொஞ்சம் பொறுங்கள்."

மாதவி அக்கா ஜீப்பை நோக்கி விரைந்தார். நானும் திவ்யாவும் பின்னே ஓடினோம். பைகளில் பொறுக்கி எடுத்த பொருட்களை ஜீப்பினுள் வீசினோம்.

வாகனத்தில் திறப்பு இருந்தது.
ஓடிப்போய் தீப்பெட்டி எடுத்துவா சிவகாமி."
பாய்ந்து போய் மூன்று தீப்பெட்டிகளுடன் திரும்பினேன்.

ஜீப் நயினாமடு சந்தியில் நேரே காட்டுள் அமைந்த சின்னப்பூவரசங்குள கிறவல் வீதியில் விரைந்தது. ஒரு மைல் தூரத்தில் வாகனத்தை விட்டு இறங்கினோம்.
வாகனத்தில் பொருட்கள். ஒரு துப்பாக்கி. சொக்லேட் பெட்டிகள் நாலு. கொக்கோகோலா பெட்டி. அவற்றை மட்டும் எடுத்தோம்.
மாதவி அக்கா பெற்றோல் கானை தூக்கினார் வாகனம் எங்கும் ஊற்றினார். தீப்பெட்டியைத் தட்டி வீசினார். ஓவென்று எரியத் தொடங்கியது.

காட்டுள் நடந்து கொண்டு இருந்தோம். தரையில் செடி கொடி தாவரங்கள் மிகக் குறைவு. பெரிய பெரிய அடி மரங்கள். உயர்ந்தவனம். வானம் தெரியாமல் பச்சை விதானம். திவ்யாவைப் பார்த்தேன். பயம், கவலை, ஏக்கம் முகத்தில் குடியேறியிருந்தன. என்னையும் புரிய முடியாத கேள்விகள் எழுந்து நின்று அச்சுறுத்தின.
திடீரென இலக்கியா கண்களில் காட்சி தந்தாள். பயம் ஓடி ஒளித்துக் கொண்டது. மிகவும் உற்சாகமாகச் செயற்பட்டேன்.
திவ்யாவுக்கு கலகக்கும்பலால் கொலை செய்யப்பட்ட மாமா காசிநாதரை நினைவூட்டினேன். அச்சம் போய் ஆத்திரம் எழுந்தது.
சொக்கலேட் பெட்டிகளை பையில் காவியபடி உசாராக நடந்தாள்.
என் தோளில் துப்பாக்கி.
'மாதவி அக்கா எங்கே போகிறோம்?" நான் விசாரித்தேன்.
'புளியங்குள புலிகள் முகாமுக்கு."
'பாதை தெரியுமா?"
'தெரியாது. திசை தெரியும். தலைவர் முதல் அமைத்த முகாம். நானும் விதூசாவும் ஆரம்பத்தில் இந்தக் காட்டுள் பயிற்சி பெற்றிருக்கிறோம். இன்னும் இரண்டு மைல் தூரத்தி;ல் புலிகளின் முகாம் வரவேணும். எனக்கு ஒரு ஓசை எழுப்பத் தெரியும். அரைமைல் கேட்கும். புலிகளுக்கு தெரியும் புலி ஒன்று அவசர உதவி கோருகிறதென்று."

வாகனம் தீப்பற்றி எரிவது கண்டு, வானரங்கள் பயந்து வெருண்டு கிளைக்கு கிளை தாவின. நிலைகுலைந்து உறுமிச் சத்தமிட்டவாறு எங்களை முறாய்த்தன. நாங்களே தங்கள் நிம்மதியைக் கெடுத்தவர்கள் என்பது நன்கு புரிந்திருந்தது.

'திசை மாறிவிட்டது. எந்தப் பக்கம் போவது?" மாதவி அக்கா. தலையில் காவி வந்த கொக்கோகோலாப் பெட்டியை இறக்கித் தரையில் வைத்தார்.

நிலத்தில் அமர்ந்தோம். சொக்லேட் சாப்பிட்டு கொக்கோகோலா குடித்தோம்.
எங்களைத் தொடர்ந்து வந்த வானரங்கள் எம்மை அவதானித்துக் கொண்டிருந்தன. எனக்கு றட்யாட் கிப்லிங் எழுதிய யங்கிள் புகநாவலில் குரங்குகள் ஒன்று சேர்ந்து எப்படிப் பகைவர்களைத் தாக்கும் என்பதைப் படித்திருந்தேன். சமூகப்பற்றுள்ள பிராணி. ஏன் தொடர்ந்து வருகுதுகள்? உள்ளூரப் பயமாகவிருந்தது. அடிக்கடி கண்களை ஏவி அவதானித்தேன்.
மாதவி அக்கா களை ஆறி முடிந்ததும், எழுந்து நின்று, வாய்க்குள் விரல் வைத்து ஓசை எழுப்பினார். விசில் அல்ல. வித்தியாசமான ஒலி. கூவிச் சென்றது. மூன்று முறைகள் திருப்பித் திருப்பி நிமிடத்துக்கு ஒருமுறை அடித்தார்.

கால் மணி நேரம் கழித்து அதே போன்ற ஒலி எம்மை நோக்கி வந்தது.
'வெற்றி. பயப்படத் தேவை இல்லை. புலிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்." மாதவி அக்கா பேசினார்.
சற்று நேரம் கழித்து மிக அருகில் அதே ஒலி மெல்லிதாகக் கேட்டது. மாதவி அக்கா உள்ளங் கைகளை வாயைச் சுற்றி அமர்த்தி 'மாதவி" என்று உரக்கக் கத்தினார்.

மரமறைவுகளை விட்டு மூவர் வெளியேறினர். எங்களை நோக்கி கை அசைத்தபடி வந்தனர்.

ஒருவரைப் பார்த்ததும் எனக்கு சொர்க்க வாசல் கதவு திறந்தது போலவிருந்தது. முருகப் பெருமானைப் பார்த்தது போலவிருந்தது.

அது வேறு யாருமில்லை.

 அண்ணை.

*** தொடரும்... ***

No comments:

Post a Comment