Thursday 1 January 2015

யேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்

 

திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் –

என்பதற்கமைய ஈழத்தமிழர் ஒருவரைப்பற்றி, அவரின் கலைத்திறமைக்காக எண்பது தொண்ணூறுகளில் யேர்மன் பத்திரிகைகள் அதிகம் எழுதின என்றால் அவர் மு.க.சு.சிவகுமாரனாகத்தான் இருக்கும். யேர்மன் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதிய இரண்டு சந்தர்ப்பங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை..

ஓவியமும் சிற்பமும் மொழியைக் கடந்து நிற்கும் கலைகள். ஈழத்து அகதிகள் தமது பிறந்த நாட்டை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்ற உண்மையை யேர்மனியர்களுக்கு உணர்த்துவதற்கு இவர் பயன்படுத்தியது சிற்பக்கலையை. யேர்மனிக்கு வந்திறங்கிய 1981 ஆம் ஆண்டில் சிலை ஒன்றை வடித்தார். போவோர் வருவோர்க்கெல்லாம் அந்த சிலை பல செய்திகளைச் சொன்னது. ஈழத்து பிரச்சினை பற்றிய தகவல்களைத் திரட்டினார்கள். பத்திரிகைகளில் எமது பிரச்சினை பற்றிய செய்திகள் வந்தன.
அடுத்தது இவர் பணியாற்றும் kostal தொழிற்சாலைக்கு இவர் செய்து கொடுத்த ஒன்றரை மீற்றர் உயரமான சிலை. அந்தச்சிலை தொழிற்சாலையின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிப் பேழையில் இன்றும் இருப்பதைக் காணலாம். ‘ஒன்றரை மீற்றர் உயரத்துக்குள் 58 வருட வாகன மின்சார உதிரிப்பாகங்களின் மறுமலர்ச்சியை வெளிப்படுத்திய கலைஞர்என்று செய்திப்பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியது.

ஈழத்தில் மாணவர்களின் கல்வி அறிவையும் எழுத்தாற்றலையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், 1950 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களிற்கும் மேலாக வெளிவந்த சிறுவர்களுக்கான மாத சஞ்சிகை வெற்றிமணி. 1979 வரை வெளிவந்த இந்தச் சஞ்சிகையில் இரசிகமணி கனக.செந்திநாதன், மகாகவி து.உருத்திரமூர்த்தி, நந்தி போன்றவர்களின் படைப்புகளும் அலங்கரித்திருந்தன. அதன் ஆசிரியராக இருந்தவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த மு.க.சுப்பிரமணியம். இவர் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் வடமாகாண ஆசிரியர் சங்க செயலாளராகவும் பணிபுரிந்தவர். இவரின் மகன்தான் சிவகுமாரன்.

சிவகுமாரன் களனி பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பட்டதாரி (B.F.A). இலங்கையில் சிற்பத்துறையில் பட்டம்பெற்ற முதல் தமிழர்கள் இருவரில் இவரும் ஒருவர். இவர்களுக்குப் பின்னர் எந்த்த் தமிழ் மாணவரும் சிற்பத்துறையில் இதுவரை பட்டம் பெறவில்லை. இவர் மகாஜனக் கல்லூரி (1978), பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரிகளில் (1980) ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினகரன் பத்திரிகையில் பொன்மலர்என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் இலக்கிய உலகினுள் பிவேசித்தார். தொடர்ந்து வீரகேசரி, தினபதி பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வந்தன. தனது பதின்ம வயதிலே ‘ஒரே ஒரு தெய்வம்என்ற குறுநாவலை வெற்றிமணி சஞ்சிகையில் எழுதியிருந்தார். செங்கை ஆழியான் தொகுந்திருந்த ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்கள் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடந்தது. தேர்தலில் தமிழர்கூட்டணி பெருவெற்றி ஈட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பகுதிகளில் அரசபடைகள் அத்துமீறிய அழிவுவேலைகளில் ஈடுபட்டன. யாழ்ப்பாண நூல் நிலையத்தையும் ஈழநாடு காரியாலயத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்கள் பலாலி, கொழும்பு முகாங்களிலும் 4ஆம் மாடி, பூசா முகாங்களிலும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். குரும்பசிட்டி பலாலிக்கு அருகாமையில் இருந்ததால் இராணுவ நடமாட்டங்கள் அங்கு அதிகரித்தன. இந்தச் சூழ்நிலைகளினால் நாட்டைவிட்டு வெளியேறினார். யேர்மனியில் குடியேறினார்.

1981, 83 காலப்பகுதிகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் காண்பிக்கும் வகையில் யேர்மனியில் ஊர்வலம் நடத்தியவர்களில் இவரும் முக்கியமானவர்.

யேர்மனியில் டோட்மூண்ட், கேர்ணே (Herne), உலூடின்சைடில் (Ludenschelder) நகரங்களில் 1990 ஆம் ஆண்டளவில் சித்திர சிற்ப கண்காட்சியை நடத்தியிருந்தார். யேர்மனியில் மாத்திரம் 19 சித்திர சிற்ப கண்காட்சிகளை வைத்துள்ளார். அத்துடன் பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளிலும் இவரது கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவரது சிற்பங்கள் ஜேர்மனியில் பல நகரசபைகளை  அலங்கரித்துள்ளன. ஹேப்பன்ஹேம் (Heppenheim) இல் இயங்கும் அகதிகளுக்கு உதவி செய்யும் அமைப்பினால் நடத்தப்பட்ட பொருட்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

1993 காலப்பகுதியில் ‘ஈழமணிஎன்ற பத்திரிகையை நண்பர்கள் சிலரின் உதவியுடன் ஆரம்பித்தார். காலக்கிரமத்தில் அது நின்றுவிட ‘வெற்றிமணிஎன்ற மாதாந்தப் பத்திரிகையை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகின்றார். இலங்கையில் இனக்கலவரங்கள் காரணமாக நின்றுபோய்விட்டிருந்த ‘வெற்றிமணிஎன்ற சஞ்சிகை, யேர்மனியில் மீண்டும் 1994 இல் இருந்து பத்திரிகையாக வெளிவருகின்றது. வெற்றிமணி யேர்மனியில் மட்டுமன்றி கனடா, ஐரோப்பிய கண்டத்திலும் வெளிவந்து கொண்டிருக்கின்ற முதல் வண்ணப் பத்திரிகை  ஆகும்.

மேலும் தற்பொழுது வெற்றிமணி யாழ் மண்ணில் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை வெளிவருகின்றது. மாணவர்களின் ஆக்கங்களையும் பாடசாலைகள் பற்றிய தகவல்களையும் அத்துடன் புலம்பெயர் நாட்டுச் செய்திகளையும் தாங்கி வருகின்றது.

அத்துடன் ஆன்மீகம், வாழ்வியல், கோவில்கள் சம்பந்தமான ‘சிவத்தமிழ்என்ற காலாண்டுச் சஞ்சிகையையும் இவர் வெளியிட்டு வருகின்றார்.

கனடாவில் வெளிவரும் ‘தமிழர் தகவல்என்ற  மாதாந்த சஞ்சிகை, 1999 ஆம் ஆண்டு நடந்த தமது ஆண்டுவிழாவின்போது இவரைக் கெளரவித்துள்ளது. அதே ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ‘ஓவியக் கலைவேள்என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி கெளரவித்தது. 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் (Cultural Doctorate in Fine Arts – USA) இவரது கலைச்சேவையை மதித்து நுண்கலைத்துறையில் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

பத்திரிகையாளன், ஓவியன், சிற்பி, கவிஞன், சிறுகதையாளன், நாடக ஆசிரியன், பேச்சாளன் எனப் பன்முகங்களைக் கொண்டவர். அது என்பது இதுவா’ (2003), குறும்பா வகை கவிதையும் – அதற்கேற்ற புதியவகை ஓவியமுமான தமிழே காதல்’ ( 2003,), குரும்பசிட்டிக் கிராமம் பற்றியதான என் காதல் கிராமத்தின் சாளரம்’  (2003) போன்ற கவிதைத் தொகுப்புகளையும், குரும்பசிட்டி சன்மார்க்கசபை வெளியீடான ஒரே ஒரு தெய்வம்குறுநாவல் (1971), இடைவெளி’ (2000) சிறுகதைத்தொகுப்பு என்பவற்றையும் தந்துள்ளார்.

அத்துடன் வெற்றிமணி வெளியீடுகளாக எழுத்தாளன் (கவிஞர் வி.கந்தவனம்), ‘திறவுகோல் (பொ.கனகசபாபதி), மாறன் மணிக்கதைகள் (பொ.கனகசபாபதி), ‘காதோடு காதாக’ (கதிர்.துரைசிங்கம், கனடா), அதிசய உலா’, ‘பொன்னும் மணியும்போன்ற நூல்களும் பால்குடி மறந்த கையோடு (சஞ்ஜே) என்ற  ஒலித்தட்டும் வெளிவர காரணமாக உள்ளார்.

ஒரே இரையில் இருந்து அரைமணித்தியாலங்கள் முதல் – இரண்டு மணித்தியாலங்களிற்குள் படித்து முடிக்கப்படக்கூடியதாக சிறுகதை இருக்கவேண்டும் என்று 1842 இல் Edgar Allan Poe என்ற அமெரிக்க எழுத்தாளர் சொன்னார். ஆனால் இவரது கதைகளைப் படித்து முடிக்க 10 நிமிடங்கள் போதும்.  இன்றைய நேரமில்லா யுகத்தில் இதுதான் கதையின் அளவு என்று வரையறை செய்து காட்டுகின்றார்.

பல வசனங்கள் சொல்கின்ற செய்தியிலும் பார்க்க, சில சமயங்களிலே வெறுங்கோடுகள் புலப்படுத்தும் செய்திகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு இவரது ஓவியங்கள் சாட்சி. இவரது ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்  முழுவதையும் உள்ளடக்கியதான புத்தகம் ஒன்று வெளிவரும்போது இவரின் ஆற்றல் மொழியையும் கடந்து நிற்கும்.

No comments:

Post a Comment