Thursday 13 November 2014

கிடுகு வேலிக்கும் கண்கள் உண்டு



தொழிற்சாலை அருகில் இருப்பதால் மதியம் வீட்டிற்கு சாப்பிட வருவது வழக்கம். சாப்பிட்டு விட்டு சைக்கிளை மிதிக்கின்றேன். 

வாசிகசாலை அருகில் ஒரு பெண் சைக்கிளுடன் தயங்கியபடியே நிற்கின்றாள். கைகளை பாதி நீட்டியும் மீதியை ஒளித்தும் வைத்தபடி "அண்ணா... அண்ணா... ஒரு உதவி" என்கின்றாள். பாடசாலை விடுமுறை. வர்ணக்கலவையில் அழகாக நிற்கின்றாள். சைக்கிள் காற்றுப் போய்விட்டதாகவும் தெரியவில்லை. அருகில் நிறுத்துகின்றேன்.

"அண்ணா...! என்னுடைய வீடுவரைக்கும் என்னுடன் கூட வரமுடியுமா?"
"ஏன்? எதற்கு?"
"என்னை ஒருவன் பின்னும் முன்னும் துரத்துகின்றான். தொந்தரவு செய்கின்றான்."

என்னுடைய சைக்கிள் முன்னும், அவளுடையது பின்னருமாக போய்க் கொண்டிருந்தோம்.

"எங்கே இருக்கின்றீர்?" தூண்டில் போட்டாயிற்று.
"சேர்ச்சுக்குக் கிட்ட. சேர்ச் இருக்கிற ஒழுங்கை வரையும் வந்தால் சரி."
"கனகாலமாக அங்கை இருக்கிறியளோ?"
"இல்லை. மூண்டு மாதமா இருக்கிறம். அப்பாவுக்கு இந்த ஊருக்கு வேலை மாற்றம்."

ஒவ்வொரு கேள்விக்கும் மறுமொழி சொல்லும் போதும், அவள் சைக்கிள் சற்று முன்னே வருவதும் பிறகு பின்னாலே போவதுமாக விளையாட்டு நடந்தது.

சற்று நேரத்தில் கன்னங்கரிய நிறத்தில் ஒருவன் சைக்கிளில் தலையைக் குனிந்து கொண்டு படு வேகமாக எங்களைக் கடந்து போனான்.
"உவன் தான். உவன் தான்" என்று குருவி போல சத்தமிட்டாள்.

சேர்ச் ஒழுங்கை வந்ததும் "நன்றி அண்ணா" என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றாள். சேர்ச் இவ்வளவு கெதியாக வரும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைய பொழுதில் நல்லதொரு செயலைச் செய்துவிட்ட மனநிலையில் வேலைக்குச் சென்றேன்.

மாலை வேலை முடித்து வீடு வந்தேன். வீடு மர்மமாக இருந்தது. சைக்கிளைப் பூட்டி பின்னாலே வைத்தேன். கொடியிலே காய்ந்த உடுப்புகளை எடுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் தங்கை ஏதோ கிசுகிசுத்தாள்.

"அம்மா ரீ போடம்மா" கிணற்றடிக்கு முகம் கை கால் அலம்புவதற்காகச் சென்றேன். அம்மா முகத்தைத் திருப்பியவாறே எடுத்த உடுப்புகளுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். முகம் மூன்றுமுழம் நீண்டிருந்தது. தோட்டத்திற்குள் நின்ற அப்பா எட்டிப்பார்த்து என்றுமில்லாதவாறு "உம்... துரை வந்திட்டார்" என்றார். கிணற்றடியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது தேநீரை என் கையில் தந்துவிட்டு "யார் அந்தப் பிள்ளை?" என்றார் அம்மா.

"எந்தப் பிள்ளை அம்மா?"
"நீ லவ் பண்ணிற பிள்ளையைத்தான் கேட்கிறன்?"







No comments:

Post a Comment