Monday 10 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 3)

எரிமலை

இன்னும் எத்தனை தினங்கள் இந்த இடிந்த பாடசாலைக்குள் தங்குவது? மாடுகள் வந்து இரவில் தூங்குகின்றன. அரைவாசியும் எங்கள், ராச நாச்சியார் வம்ச மாடுகள். கருமை மெல்லிதாகக் கலந்த சிவப்பு மாடுகள். பூர்வீகம் பாகிஸ்தானின் சிந்து மாகாணம். இடைவெப்ப வலைய ஜேர்சி இன ஐரோப்பிய மாடுகளுடன், வட இந்தியாவில் வைத்து இனப் பெருக்கம் செய்து பெற்றவை. பால்வளம் மிக்கவை. தாத்தா துரோணர் அறிமுகம் செய்தவை.மேய்ச்சல் முடிந்து வருகின்றன.

நுளம்புக்கடி மோசம். வாலைஆட்டி ஆட்டிவீசித் துரத்துகின்றன.

முந்தாநாள் இரவு முறிந்த மரங்கள் போட்டுத் தீ மூட்டி விட்டேன். நிம்மதியாய் தூங்கினதுகள். தினமும் ஒற்றைக் காலில் தாவித் தாவி விறகு பொறுக்கி நெருப்பு கொளுத்தி நுளம்பைத் துரத்த முடியவில்லை.

வானமே துணை என்று வாழ்கிறேன். மழைவந்தால் ஒதுங்க ஆன இடமில்லை.

களுபண்டா அடிக்கடி வரத்தொடங்கினார். கல்யாணம் பற்றி ஒரே கரைச்சல். சம்மதம் தெரிவித்திருந்தேன். திருமணத்துக்கு நாளும் குறித்திருந்தோம். ஒரு நிபந்தனை: ஆறு மாதங்ளின் பின்னர் திருமணம். அதனிடையில் எனது இல்லத்துக்கு நான் அழைத்தால் மட்டும் வரவேண்டும்.

தேவி தம்பன் ஒரு கூட்டத்தை அழைத்துக் கொண்டு 'கலாச்சாரச் சீரழிவு" என்று கத்திக்கொண்டு வந்தாளே. எப்படிச் சமாளித்தாய்என்று நீங்கள் மனதுள் வினா எழுப்புவது எனக்குக் கேட்கிறது.

'நீங்கள் தமிழ் மாப்பிளை கொண்டு வாருங்கள்" என்று ஒரு போடு போட்டேன். வாயைப் பொத்திக்கொண்டு ஆளை ஆள் முழுசி முழுசிப் பார்த்துக்கொண்டு நழுவி நழுவிப் போனார்கள். சுசீலா அக்கா தேவியை சனியன்என்று திட்டிக் கொண்டு போனவ.

கலாசாரச் சீரழிவுக்காக மின்சாரக் கம்பங்களில் கட்டி சுட்ட புலிகள் அமைப்பில் மேஜராகப் போர்க்களம் பல கண்டவள் இந்தச் சிவகாமி. எனக்கு அது பற்றி தேவி தம்பன் வகுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. தமிழ்க் கலாசாரத்தில் அவளுக்கு உரிய பங்கு அக்கறை எனக்கும் உண்டு. நான் ராச நாச்சியார் வம்சப் பெண்.

நான் குளிக்க குளத்துக்குப் போக ஆயத்தம். ஒருவர் நேரே நான் தங்கியிருக்கும் இடிந்த அறைக்கு வந்தார்.
'வவுனியா கல்வித் திணைக்களத்திலிருந்து வருகிறேன். நாங்கள் பாடசாலையைப் புதுப்பித்துக் கட்டப் போகிறோம்" என்றார்.
'நல்லது. செய்யுங்கள், ஐயா."
'பிள்ளை, ஜேர்மன் அரசு ஐந்து மில்லியன் தந்துள்ளது. ஆறுமாதத்தில் வேலை முடிக்கவேணும்."
'ஐயாஅதை ஏன் எனக்குச் சொல்கிறீர்கள்?"
'பிள்ளை, நீ எழும்பினால்தானே வேலை தொடங்கலாம். தயவு செய்து இன்று பின்னேரமே வேறு இடம் போய்விடு. விளங்குதே?"
அவரின் ஜீப் பாடசாலை எதிரே உள்ள பாலை மரத்தின் கீழ்  நின்றது.
'ஐயா,  இன்னும் ஒரு கிழமை மட்டும். வீதிக்கு அந்தப் பக்கம் பாருங்கள். நிலம் துப்பரவு நடக்கிறது. நான் இந்த நாலு சுவர்களுள் இருக்க வேறு ஒரு பக்கத்தில் வேலையை ஆரம்பிக்கலாந்தானே?"
'பிள்ளை, புல்டோசர் வருகுது நாளைக்குக் காலமை."

நீளக் கறுப்புக் காற்சட்டை வெள்ளைச் சேட் அணிந்து சிவப்பு ரை கட்டின பொலிவான மனிதர். ஐம்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும். தலை நல்லாக நரைக்கத் தொடங்கி இருந்தது. என்னை சிறிது நேரம் நன்கு உற்றுப் பார்த்தார்.
'பிள்ளை உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்குது."
'வவுனியா பூந்தோட்டத்திலா?"
'இல்லை."
'எங்கே பார்த்தீர்கள்?"
'கிளிநொச்சியில்."

எனக்குப் புரிந்தது பூகம்பம் வெடிக்கப் போவது.

'பொறு பிள்ளை. யோசிக்கிறன்."
'பழைய கதையை விடுங்கள் ஐயா."
'பிள்ளை நீ மேஜர் சிவகாமியா?"
தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.
'நான் வாறன். உன்னோடு பேசுவதைக் கண்டாலே ஆமிக்காரன் இழுத்துக் கொண்டு போய் விடுவான். விசாரணை அடி  உதை சிறை என்று கதை நீளும். கல்யாண வயசில் எனக்கு  இரண்டு குமர்கள்."

அந்த மனிதர் அவசர அவசரமாக குடுகுடென்று ஓடிப் போய் வாகனத்தில் ஏறினார். வாகனம் இரைந்து தள்ளிக் கொண்டு ஓடி மறைந்தது.

இயக்கத்தில் இருந்த வேளை மேஜர் சிவகாமியைக் கண்டு அஞ்சி அஞ்சிப் பழகினார்கள். இப்ப புனர்வாழ்வு பெற்ற அகதி சிவகாமியைக் கண்டும் அஞ்சுகிறார்கள். அருகே நிற்கப் பயப்படுகிறார்கள். எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்கான அடையாளங்கள்.

இயக்கத்திலிருந்த காலத்தில் கொஞ்சம் அதிகார தோரணையில் சர்வாதிகாரி போல நடந்துவிட்டேன். மாற்று அமைப்புகளை, அரசியல்வாதிகளை, கலைஞர்களை, முக்கியஸ்தர்களை தமிழ்ச் சகோதரங்களாக மதிக்கவில்லை பகைவர்களாக துரோகிகளாகத்தான் பார்த்தேன். போராட்டச் சூழ்நிலையின் நிர்ப்பந்தம். அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அங்கிள் குட்டிக் குட்டிச் சொன்னவர். அடேல் அன்ரியும் எச்சரித்தவர். நான்தான் எடுத்தெறிந்து நடந்துவிட்டேன். காலந் தப்பிய ஞானம் காட்டு வழிக்கும் உதவாது என்பது நந்திக்கடலோரம் திகைத்து நின்றபோதுதான் புரிந்தது.

பிற்பகல் வேளை. பாடசாலையால் எழும்ப வேண்டும். என்ன செய்வது என்று புரியாது விம்மிக் கொண்டிருந்தேன்.

ஐந்து இராணுவத்தினர் வீதியில் நடந்து வருவது சற்றுத் தொலைவில் கிழக்கே தெரிந்தது. சிவில் உடையில். கோலை எடுத்துக் கொண்டு வீதி ஓரம் சென்று, பாடசாலை வாசலில் உள்ள உயர்ந்து படர்ந்த இராட்சத பாலை மரத்தின் கீழ் நின்றேன். மேலே கிளைகளில் இரண்டு மர அணில்கள் ஓயாமல் ஒன்றன் பின் ஒன்று கிளைவிட்டு கிளைக்குப் பாய்ந்து கொண்டிருந்தன.

இராணுவத்தினர் அருகே வந்துவிட்டனர். கூடினால் இருபத்திமூன்று வயதிருக்கும். ஏதாவது லக்சண தெமில கெல்லா---அழகிய தமிழ் மங்கை---கொத்தலாமா என்பதை அறியவே அப்படி நடைபவனி.
ஒருவன் வாயைத் திறந்தான். 'மேஜர் நோநா சொகம் எப்படி?"
'நல்ல சுகம். எனக்கு ஒரு உதவி தேவை."
'என்ன உதவி? நாங்க செய்யுறான்."
'களுபண்டாவைப் பார்க்க வேணும். அவசரம்"
ஆளை ஆள் பார்த்தார்கள். என்ன அவசரம் என்று யோசித்திருக்கவேணும். நான் தொடர்ந்தேன்.
'பாடசாலையை விட்டு எழும்பச் சொல்கிறார்கள்."
'எவன் சொன்னான். அவனை நாங்க உதைக்கிறான்."
'கல்வி இலாகா அதிகாரி. காலையில் வந்தவர்."

சாந்தமாக என்னைப் பார்த்தனர்.

'அதோ தார்ப்பாய் இருக்குது. எதிரே இருக்கிறது எங்கள் வளவு. துப்பரவாக்கி இருக்கிற இடத்தில் அதை அடிக்க வேணும். களுபண்டா வந்தால் செய்து தருவார்."
'நோநா. களுபண்டா எதற்கு. நாங்க செய்கிறான்." என்று சொன்னார்கள்.
எனது பதிலுக்குக் காத்திருக்கவில்லை. தார்ப் பாயை காவிச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் கூடாரம் அழகாக எழுந்து நிமிர்ந்து நின்று என்னைப் பார்த்து அழைத்தது. கூடாராத்துள் இருந்து பார்த்தாலே வீதி விழிப்பாய்த் தெரியும். ஐம்பது யாரும் இல்லை.

எதிர்பார்ப்புகள் எதிர்பாராமல் நிறை வேறுவதால் வரும் இன்பம், தனித்துவ மகத்துவம் வாய்ந்தது. ஆயிலடி முருகன் அருள் புரிந்தது போல மகிழ்வாய் இருந்தது.

'போஹம ஸ்துதி."
'மேஜர் சிவகாமி நோநா போஹம லட்சணாய்."
அந்த வார்த்தைகள் என் காதுகளில் கசத்தன. வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

தார்ப்பாய்க் கூடாரத்துக்கு மேற்குப் பக்கமாக எங்கள் சிதைந்து போன வீடு. கிழக்கில் கிணறு.வளவு நிறைந்த மா பலா இலுப்பை மரங்கள். செல் விழுந்து கிளைகள் முறிந்து, பரிதாப கோலத்தில் காட்சி தந்தன.

வேலைமுடிந்து கிணற்றை எட்டிப் பார்த்தார்கள். கிணற்றுள் எங்கள் வீட்டில் இருத்த பொருட்கள். சமையல் பாத்திரங்கள், வாளி, போத்தல், இன்னும் எத்தனையோ பொருட்கள். பார்த்துவிட்டுத் தமக்குள் ஏதோ குசுகுசுத்தார்கள்.
'நோநா, நாங்கள் வாறம." புறப்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் சிங்களத்தில் பெயர் ஊர் விசாரித்து தனித்தனி நன்றி சொன்னேன். பெரிதும் மகிழ்ச்சி கொடுத்தமை வதனங்களில் தெளிவாகத் தெரிந்தது.

முன்னேறி வந்து கொண்டிருந்த இராணுவம் ஆயிலடியைக் கைப்பற்றி முடிந்ததும், ஒவ்வொரு வீடாக யாராவது மறைந்து இருக்கிறார்களா என்ற சோதனையில் இறங்கியது. காட்டில் ஒளித்திருக்கும் விடுதலைப் போராளிகள் இரவில் தங்கி சமைத்துச் சாபிட வாய்ப்புண்டு. அதை இல்லாமற் செய்யவே வீட்டுக்குள் இருந்த பொருட்களை கிணற்றுள் வீசினர். வீட்டில் நூல் நிலையத்தில் இருந்த--தாத்தா காலத்து நூல்கள் உட்பட---அத்தனையும் வீட்டுக்கு வெளியில். மழையில் நனைந்து சேதமாகி உக்கி இருந்தன. சில பொருட்களை தீவைத்துச் சாம்பலாக்கி இருந்தனர்.

ஒரு கேள்வி எழுந்தது. இடிந்த பாடசாலையிலிருந்து எனது பொருட்களை எடுத்து வரவேண்டும். சுசீலா அக்கா வரமாட்டாவா என்று ஏங்கினேன். மணிஅண்ணை வந்தால் கூட உதவுவார்.

இப்பொழுது ஊரில் உள்ள சிறு பிள்ளைகள் என் அருகே வரத் தொடங்கியிருந்தனர். ஆரம்பத்தில் பயந்து பயந்து தூரத்தில் நின்று பார்த்தவர்கள்.அருகே வந்து கதை கேட்கத் தொடங்கினர்.
தார்ப்பாய்க் கூடார வாசலில் நின்றேன். கமக்கட்டில் ஊன்றுகோல். ஒரு சின்னக் கூட்டம் என் அருகே வந்தது.

பையன் ஒருவன் திடீரெனக் கேட்டான், 'அன்ரி நீங்கள் எத்தனை ஆமியைக் கொன்றீர்கள்?"
பொருட்களைக் காவும் பிரச்சினையில் மூழ்கியிருந்த எனக்கு, அவர்கள் திட்டம் போட்டு அந்தக் கேள்வியை மட்டுமல்ல வேறும் ஒரு முக்கிய கேள்வியையும் சுமந்து வந்துள்ளார்கள் என்பது பின்னர் தான் புரிந்தது.
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. செம்பில் நீர் தந்த கோமதி கேட்டாள், 'அன்ரி நாங்கள் ஆமிக்குச் சொல்ல மாட்டம். உள்ளதைச் சொல்லுங்கோ?" அவள் மற்றவர்களிலும் கொஞ்சம் பெரிதாய், அவர்களின் லீடர்போலப் பட்டாள். போனி ரெயில்.சிரிக்கும் போது கன்னத்தில் குழிவிழுந்தது. முழங்காலை மூடிய சிவப்புக் கவுன். பொதுநிற மேனி பளிச்சிட்டது.
'ஒரு பத்து?" இன்னொரு சிறுமி தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டாள். காதில் தங்க ஜிப்சி ஆடியது.
'பத்து இல்லை. சிவகாமி அன்ரி மேஜர். நூறு பேருக்கு மேலே போட்டுத் தள்ளியிருப்பார்." அவனைப் பார்த்தேன். கறுப்பு ரீ சேட். கறுப்புக் கட்டைக் காற்சட்டை. முழங் காலுக்கு மேலே தொடையில் செல் சிராய் சதையைக் காவிக்கொண்டு போன அடையாளம் கண்களைப் பறித்தது. எல்லோரிலும் ஒரு ஒற்றுமை காணப்பட்டது. வயதுக்கு ஏற்ற தோற்றம் வளர்ச்சி தெரிய வில்லை. கருவாடு போலக் காய்ந்து போயிருந்தார்கள்.

திசை திருப்ப 'பிள்ளையள், எனக்கு வேலை நிறைய காத்திருக்குது. என்னுடைய சாமான்களை காவிவரப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு வீதியை நோக்கிக் கோல்களை ஊன்றி நடந்தேன். திரும்பிப் பார்த்தேன்.
சின்னக் கூட்டம் லீடரின் பின்னே என்னைத் தொடர்ந்தது. அப்பொழுதும் அவர்கள் ஏன் என்னைத் தொடர்கிறார்கள் என்பது மூளைக்கு எட்டவில்லை.
கூரை அற்ற இடிந்த சுவர்களுள் கண்கள் படிந்தன. பொருட்களில் எதை முதல் காவுவது? ஒரு பொலித்தீன் பையுடன் வந்தனான். மனிதநேய நிறுவனங்கள் தந்த பொருட்கள் என்னைப் பார்த்துப் பரிதாபம் காட்டின. வாழ்க்கை சகடக் கால் போன்றது.

'அன்ரி. நீங்களே நடக்க மாட்டாமல் தத்தக்க பித்தக்க என்று தள்ளாடுறியள். நீங்கள் புலி மேஜர்தானே. சும்மா பார்த்துக்கொண்டு  ஓடரபோடுங்கள். நாங்கள் கொண்டு போய்ச் சேர்க்கிறோம்."
'உன்னுடைய பெயர் கோமதிதானே?"
'ஓம் அன்ரி."
ஒன்பது பேர். கிட்டத்தட்ட ஒன்பது பத்து வயது. ஐவர் பெண்கள். மீள்குடியேற்ற வாழ்க்கை என்றாலும் ஆடைகள் பரவாயில்லை. இலவசமாகக் கிடைத்தவை. பெண் பிள்ளைகள் தலைவாரி பொட்டு வைத்து சுத்தமாக அழகாகவிருந்தனர். அகதி வாழ்க்கை முடிந்து மீள் குடியேற்ற வாழ்க்கை என்றாலும் தாய்மார் பெண் பிள்ளைகளில் விசேட கவனமாய் இருப்பதாய்ப் பட்டது.

உலர் உணவுப் பொருட்கள், சுசீலா அக்கா தந்த சீனிப் போத்தல், மிளகாய்த்தூள் ரின், மாசிலாமணிஅண்ணைதந்த தேநீர் குவளை, இலவச பங்கீட்டில் கிடைத்த சமையல் பாத்திரங்கள், மண்ணெண்ணெய் கான், தகர விளக்கு, கத்தி, கோடரி, மண்வெட்டி, பாய்,பிளாஸ்ரிக் குடம், வாளி - எல்லாம் எனது புதிய தார்ப்பாய் இல்லம் போய்விட்டன.

கோலை ஊன்றி நடந்து போய் தார்ப்பாய் இல்ல வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். பொருட்கள் யாவும் அழகாய் அடுக்கியிருந்தன. அவர்களைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தேன்.
'அன்ரி நாளைக்கு வருவோம். சொல்லவேணும். எத்தனை சிங்களவனைக் கொன்றீர்கள் என்று." ஒரு பையனின் வேண்டுகோள். இவன் இப்பொழுதுதான் வாய் திறந்தவன். பரிதாபமாய் இருந்தது. வலது கால் பாதத்தின் முன்னரைப் பகுதி இல்லை. உற்றுப் பார்த்தேன்.
'மேஜர் அன்ரி. கரையாமுள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்துள் இருந்தனாங்கள். இராணுவம் ஏவின செல்வந்து விழுந்த பொழுது சிராய் வெட்டினது. பரவாய் இல்லை. எனக்குக் காலிலே ஒரு சின்னத் துண்டு போயிற்று. ஆனா......." அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை. அழத்தொடங்கினான். லீடர் கோமதிதான் நிறைவு செய்தாள். 'அன்ரி. அந்தச் செல் தங்கன்டை அம்மாவின் உயிரை எடுத்துப் போட்டுது."
தங்கனைப் பார்த்தேன். மேலே தார்ப்பாய்க் கூடாராக் கூரையைப் பார்த்து விம்மிக்கொண்டு நின்றான்.

புதிய ஒரு கேள்வியை லீடர் கோமதி சிரித்துக் கொண்டே வீசினாள். 'அன்ரி, நாங்கள் ஒரு விண்ணப்பத்தோடுதான் உங்களிடம் வந்திருக்கிறோம்."
கோமதியை பார்த்தேன். தொடர்ந்தும் சிரித்தாள். 'சொல்.என்ன விண்ணப்பம்?"
'நீங்கள் ஏன் அன்ரி துப்பாக்கி ஏந்திப் போராடப் போனீங்கள்?"
அவளது கேள்வி என் நரம்புகளைத் துடிக்கச் செய்தது. ராச நாச்சியார் வம்சம் முற்றாக அழிந்து மறைந்து போன கதை. நான் மட்டும் எச்சம். அது கூட விடுதலைப் போராட்டப் பாதையில் பலி பீடத்தில் ஏற்றி வைத்திருக்கிற உயிர்தான்.

'அந்தக் கதையை நீங்கள் சொல்ல வேணும். எங்கள் பணிவான விண்ணப்பம்."மீண்டும்லீடர் கோமதி பேசினாள்.
'அது நீண்ட காவியம். வீரம், சோகம், பரிதாபம், ஏமாற்றம், கொடுமை, பயங்கரம் நிறைந்த கண்ணீர்க் காவியம். சொல்லப் போனால் பல கிழமைகளாகும்."
'பரவாயில்லை அன்ரி. நாங்கள் உங்களுக்கு வசதியான தினங்களில் வருகிறோம். உங்களுக்குத் தேவையான உதவி செய்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஏன் விடுதலைப் போராட்டத்துக்குப் போனீர்கள் என்பதைச் சொல்லவேணும்.

'சரி. இன்றைக்குத் திங்கட்கிழமை. புதன்கிழமை ஆரம்பிப்போம். எனக்குப் புதன்கிழமையில் சின்னப் பற்றுதல்." 'தாங் யூ அன்ரி" எல்லோரும் முறைவைத்துச் சொன்னார்கள்.
தோட்டத்துக் கொல்லையில் மிளகாய்ப் பழம் கொறிக்கும் பச்சைக் கிளிகள், அரவம் கேட்டு எழுந்து கூட்டமாய்ப் பறக்கும் வேளை,  நீள்சுரத்தில் கீ கீ ’ என்று கத்திக்கொண்டு பறப்பது போல,கீயென்று கூச்சலிட்டுத் துள்ளியபடி ஓடி வீதியில் இறங்கி மறைந்தனர்.

அடுத்த நாள். நண்பகல்.

இனிமேல் கோப்பை ஏந்திக்கொண்டு நயினாமடு இராணுவ முகாம் வாயிலில் நிற்பதில்லை என்று தீர்மானித்தேன்.

கூடாரத்துக்கு வெளியே, கிழக்கே கிணற்றுப் பக்கமாக மூன்று கல் வைத்த அடுப்பு. சமைக்கத் தொடங்கினேன். அடுப்பில் கத்தரிக்காய்க்கறி. அவிந்த நறுமணம் மூக்கின் வழியே கூவிக்கொண்டு  நுழைந்தது. நிலத்தில் மரக்கட்டையில் அமர்ந்தபடி வீதிக்கு மறுபக்கத்தில் அமைந்த பாடசாலையை நோக்கினேன்.
காலையில் புல்டோசர் பாடசாலைக் கட்டிடங்கள் அனைத்தையும் இடித்துத் தள்ளிக் குவித்து முடித்திருந்தது. கற்குவியல்களை கூலியாட்கள் ட்ரக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

திடீரென இராணுவ ட்ரக் ஒன்று வளவு வாசலில் வீதியில் நின்றது. அலட்டிக் கொள்ளவில்லை. பழக்கப்பட்டுப் போன காட்சி. கூடார மடித்த ஐந்து இராணுவ இளைஞர்கள். படார் படாரென வாகனத்தால்  குதித்தனர். பூரண இராணுவ உடையில்.
நீர் இறைக்கும் பம், பைப் காவி வந்தனர். எனக்குப் புரிந்தது. கிணற்றைத் துப்பரவு செய்யப் போகிறார்கள் என்று. பம் நீரை அள்ளிக் கொட்டியது. கிணறு சுத்தமாக்கும் வேலை மும்முரமாக நடந்தது.
கேணல் ரணவீரவின் ஜீப் கூடாரத்தின் எதிரே வீதியில் நின்றது. இறங்கி இராணுவ மிடுக்குடன் நடந்து வந்தார். பின்னே புகைப்படப் பிடிப்பாளர்.ரணவீரவைபார்த்ததும் என் நெஞ்சம் கொதித்தது.
கேணல் ரணவீர கிணற்று ஓரம் நிமிர்ந்து நின்றார். புகைப்படக் கலைஞன் மளமளவென்று புகைப்படம் எடுத்தார். இராணுவ இளைஞர் கிணற்றுக்குள் உள்ள பொருட்களை வெளியே எடுத்தனர். என்னையும் அவ்விடத்தில் நிற்கச் செய்து படம் எடுத்தனர்.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் வேலை முடிந்து அவர்கள் போய்விட்டனர்.

கிணற்றை எட்டிப் பார்த்தேன். வெகு சுத்தமாய்த் தெரிந்தது. மகிழ்ச்சி தந்தது. அப்பொழுதுதான் பட்டைக் கிடங்கு நிறைந்து, நீர் பரவையில் பரவிக் கொண்டிருந்தது. ஊற்றுப் பெரிதாய் இல்லை. மூன்று இடங்களில் சிறிய ஊற்றுக்கள். நீர் மட்டம் வரை நிரம்ப இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.

எல்லோரும் போய்விட்டார்கள். முடம் என்ற பரிதாபத்தில் செய்தது என்று எண்ணுவீர்கள். இல்லை. மக்களோடு நயினாமடு இராணுவம் நட்பு ரீதியாகப் பழகுகிறது. மக்களும் இராணுவத்தோடு நேசமாய்ப் பழகுகிறார்கள். அப்படி வெளி உலகிற்குச் சொல்லி மீள்குடியேற்றத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் எதுவித பிரச்சினையும் கிடையவே கிடையாது என்பதை உறுதிப் படுத்தவே அப்படி ஒரு பரிதாப நாடகம்.

என் கண்கள் ஜீப்பை நோக்கி நடந்து கொண்டிருந்த முறுகி விளைந்த முத்திரைப் புடையனை பின் தொடர்ந்தன. எண்ணங்கள் வெடிக்கப்போகும் எரிமலையாய்க் குமுறின. வெடிக்காது அமிழ்ந்து மறைந்துபோன எரிமலைகளுமுண்டு. சிவகாமி வெடிக்க முன்னர் குமுறுகின்ற எரிமலை.
*** தொடரும்***

No comments:

Post a Comment