Saturday 8 November 2014

அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் - பகுதி 2

(சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை )

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

மல்லிகை சிறப்பிதழ்


மல்லிகை 'அவுஸ்திரேலியா சிறப்பு மலர்' நவம்பர் 2000 இல் வெளிவந்தது. இதன் அட்டைப்படத்தை கலாமணி பரணீதரன் வரைந்துள்ளார். இவர் தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' இதழின் ஆசிரியர். அவுஸ்திரேலியா சிறப்பு மலரில் பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் (காக்கோபதேசம்), லெ.முருகபூபதி, எஸ்.சுந்தரதாஸ்21, நடேசன்22 (அவுஸ்திரேலியாவில் பத்திரிகைச் சுதந்திரம்), பாலம் லஷ்மணன்23 (புலம்பெயர்வில் எதிர்நோக்கும் சவால்), உரும்பை மகள் - அருண் விஜயராணி (கதை சொல்லும் சிலைகள்), பிரவீணன் மகேந்திரராஜா24 (இளந்தளிரின் புதிய அனுபவம் - இக்கரையும் அக்கரையும்), ஜெயசக்தி பத்மநாதன்25 (குழந்தை வளர்ப்பு : ஒரு திறவுகோல்), ஞானம் (அவுஸ்திரேலியப் பழங்குடியினர்), தி.ஞானசேகரன் (அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்), அம்பி (செந்தமிழும் நாப்பழக்கம்), ரேணுகா தனஸ்கந்தா26 (பொன் விளையும் பூமி), கலாநிதி வே.இ.பாக்கியநாதன் (அவுஸ்திரேலிய ஆதிவாசிகளும் பண்பாட்டுக் கோலங்களும்), மாவை நித்தியானந்தன் (நாடகத்தில் நகைச்சுவை) என்பவர்களின் கட்டுரைகளும் புவனா இராஜரட்னம்27 ('எங்கள் கலாசாரம்'), நல்லை க.குமாரசாமி28 ('மனையியலும் மணவியலும்'), யோகன் (உண்மையைத் தவிர வேறில்லை, சொல்லாமற் போகும் பயணங்கள்), அருண் விஜயராணி (திருப்பம்), அ.சந்திரகாசன் (குண்டுச் சட்டிக்குள் குதிரைகள் ஓடி), மாத்தளை சோமு (வாமனம்), ஆசி கந்தராஜா (மறுக்கப்படும் வயசுகள்), த.கலாமணி (முதுசொம்) என்பவர்களின் சிறுகதைகளும் உள்ளன.

கவிதைகளாக அசன் எழுதிய 'சட்டப்பிராணி' இடம்பெற்றுள்ளது.

'இயந்திர வாழ்விலும் இயங்கியல் தேடல்' என்ற முருகபூபதியின் கட்டுரையில் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, வானொலிச்சேவை மற்றும் தமிழ் இதழ்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். 'வந்தார்கள் வாழ்கிறார்கள்' என்பது எஸ்.சுந்தரதாஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு---அவுஸ்திரேலியாவில் சராசரி மனிதனுக்குத் தேவையான கல்வி, தொழில், சுகாதாரம், இருப்பிடம், சமயச்சடங்கு, பொழுதுபோக்கு எல்லாம் கிடைக்கின்றன. இவற்றைவிட உயிருக்கான பாதுகாப்பு இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போர்ச்சூழல் காரணமாக இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் பலநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றார்கள். ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள தமிழர்கள் இலங்கையில் இழந்துள்ள பலவற்றை இங்கே பெற்றுள்ளார்கள்---என்கின்றார் இந்தக் கட்டுரையாளர். தட்சிணகைலாச புராணத்தில் இடம்பெறும், விச்சிரவாகு முனிவருக்கும் இராத்திரி கரி அரக்கிக்கும் பிறந்த இராவணேசுவரன் பற்றிய கதையொன்றைக் குறிப்பிடுகின்றது பொன்.பூலோகசிங்கம் அவர்கள் எழுதிய 'காக்கோபதேசம்'.

'டண்டினோங் ரேன்ஞ்சஸ்' என்னுமிடத்திலுள்ள 'William Ricketts Sanctuary' என்பதைப்பற்றிச் சொல்கின்றது 'கதை சொல்லும் சிலைகள்' என்ற கட்டுரை. வில்லியம் ரிக்கட்ஸ் என்ற வெள்ளையர், 'அபோர்ஜினிஸ்' வாழ்க்கை முறையினால் ஈர்க்கப்பட்டு அவர்களது உணர்வுகளை மற்றவர்களுக்கு இனம்காட்டும் வகையில் உருவாக்கிய சிற்பவேலைப்பாடுகளை அங்கே காணலாம். அவுஸ்திரேலிய நடப்புகளைப்பற்றிக்  கூறும் கட்டுரை 'இளந்தளிரின் புதிய அனுபவம் - இக்கரையும் அக்கரையும்'. மேலைத்தேயக் குழந்தை வளர்ப்புப் பற்றிய ஒரு பார்வையை ஜெயசக்தி முன்வைக்கின்றார். புலம்பெயர்ந்து வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ்ச்சமுதாயம் 'வீட்டு மொழி' என்ற அந்தஸ்தை தமிழுக்கு என்றும் அளித்தல் வேண்டும். எதிர்காலத் தமிழ்ச் சமுதாயம் 'தமிழ் பேசும்' சமுதாயமாக வாழ அதுவே வழிவகுக்கும் என்கின்றார் கவிஞர் அம்பி.

ஞானம் சிறப்பிதழ்

 ஞானம் வெளியிட்ட எழுத்தாளர்விழாச் சிறப்பிதழில் (அவுஸ்திரேலிய நான்காவது எழுத்தாளர்விழா சிறப்பிதழ் - 2004 பெப்ரவரி) ஆறு அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் வெளிவந்த 20 படைப்புகளில் 7 படைப்புகள்தான் அவுஸ்திரேலியாவைப் பிரதிபலிக்கின்றன. நல்லைக்குமரன், அருண் விஜயராணி, லெ.முருகபூபதி, பாமதி பிரதீப்29, செ.பாஸ்கரன் போன்றோரின் கட்டுரைகளும் 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனின் ஒரு சிறுகதை (மண்புழு) இரண்டு நேர்காணல்களும் (எழுத்தாளர்விழா பற்றி முருகபூபதியுடனான செவ்வி, இன்பத்தமிழ் வானொலி இயக்குனர், அறிவிப்பாளர் பாலசிங்கம் பிரபாகரனுடன் ஒரு செவ்வி) உள்ளன.

ஆசிரியர் தலையங்கமாக 'எழுத்தாளர்விழா' பற்றிய அறிமுகமும், நல்லைக்குமரனின் கட்டுரையில் எழுத்தாளர்விழா நடைபெறும் தலைநகரான 'கன்பரா' பற்றிய அறிமுகமும் உள்ளன. பவளவிழாக் காணும் கவிஞர் அம்பி பற்றி அருண்.விஜயராணியின் கட்டுரை எழுதியுள்ளார். 'தமிழின அடையாளம் பேணும் முயற்சிகள்' என்ற முருகபூபதியின் (ரஸஞானி) கட்டுரையில் அவுஸ்திரேலியாவில் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றியும் அங்குள்ள எழுத்தாளர்கள் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்பிடப்படுகின்றது. 'பா(ழ்..?)ல்..!' என்ற கவிதை சிட்னியில் வதியும் ஜமுனா30 என்பவரால் எழுதப்பட்டுள்ளது. 'சிட்னியில் தமிழ் நாடகங்களும் இலக்கியப்பவரின் பங்களிப்பும்' என்ற செ.பாஸ்கரனின் கட்டுரை இதுவரைகாலமும் சிட்னியில் நடைபெற்ற நாடக முயற்சிகள் பற்றிச் சொல்கின்றது.

21. எஸ்.சுந்தரதாஸ்
22. எஸ்.என்.நடேசன் - வாழும்சுவடுகள் (2002), வாழும் சுவடுகள் 2 என இரண்டு கட்டுரைத்தொகுப்புகளையும் வண்ணாத்திக்குளம் (2003),உனையே மயல் கொண்டு (2001) என்ற நாவல்களையும் மித்ர பதிப்பகத்தினூடாக வெளியிட்டுள்ளார்.
23. பாலம் லஷ்மணன்
24. பிரவீணன் மகேந்திரராஜா
25. ஜெயசக்தி பத்மநாதன்
26. ரேணுகா தனஸ்கந்தா
27. புவனா இராஜரட்னம்
28. நல்லைக்குமரன் க.குமாரசாமி - ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய ஆங்கில நாவலான Animal Farm (விலங்குப் பண்ணை) என்பதை தமிழிற்கு மொழிபெயர்த்தவர். நடேசனின் 'வண்ணாத்திக்குளம்' நாவல், டொமினிக் ஜீவாவின் 'வரையப்படாத சித்திரத்திற்கு எழுதப்படாத கவிதை' என்ற சுயசரிதை நூல் என்பவற்றை தமிழிலிருந்து 'Butterfly Lake', 'Undrawn Portrait For Unwritten Poetry' என ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்தவர்.
29. பாமதி பிரதீப்
30. ஜமுனா                       *** தொடரும் ***




1 comment:

  1. கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை வரவேற்கின்றேன்.

    ReplyDelete