Wednesday 23 July 2014

ஆங்கொரு பொந்திடை வைத்த...


"அரை மணித்தியாலத்துக்குள்அலுவலை முடிச்சிட வேணும்"
முன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கபாலர் சொன்னார்.
"இப்ப ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணி மட்டிலை திரும்பி விடவேணும்" ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும் ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.
"பாத்தியேடா தம்பி! மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப நரகமாப் போச்சு."
சைக்கிள்கள் இரண்டும் பிரதான வீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில் விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது ஏற்படும் 'சர சர' ஒலியைத் தவிர வேறு ஒரு சத்தமுமில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.
1. என்னுடையதும் தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்டுகள்
2. அப்பா சொன்ன சுவாமிப் படங்கள்
3. கொத்து விறகு
4. தேங்காய்
5. புத்தகங்கள் (மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)
இவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.
6. ரேணு போய்

'ரேணு போய்' எங்கடை நாயின் பெயர். அவளுக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. நாலைஞ்சு வருஷம் இருக்கும். ஒருநாள் 'சமய பாடப் பரீட்சை' முடிந்து வரும்போது வழியிலை இருந்து பிடித்துக் கொண்டு வந்தாள். வரும்போது ஒரு நோஞ்சானாக இருந்தது, பிறகு கொழு கொழுவென்று கொழுத்து விட்டது. அந்த நாய், நாங்கள் இடம்பெயர்ந்து ஓடி வரும்போது எங்களுடன் கூட வரவில்லை. அதிகாலையில் எழுந்த 'ஷெல்'லடிச் சத்தத்துக்குப் பயந்தோ என்னவோ எங்கேயோ ஒடி ஒளித்து விட்டது.
வாசிகசாலை வந்ததும் கோபாலர் சைக்கிளின் வேகத்தைத் தணித்தார். அதிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் போனால் அவர் வீட்டிற்குப் போய் விடலாம். கை விரல்களினால் 'ஆறு' என்று காட்டினார். பின் சைக்கிளை ஒழுங்கைக்குள் வேக வேகமாகச் செலுத்தினார். கோபாலரை நம்ப முடியாது. பொலிசுக்காரப் புத்தி. சரியாக ஆறுமணிக்குத் திரும்பாவிடில் என்னை விட்டுட்டும் போய் விடுவார். உவருக்குப் பொலிஸ் உத்தியோகந்தான் நல்ல பொருத்தம். "ஏன் நீங்கள் பொலிசுக்கார உத்தியோகத்தை விட்டிட்டு வந்தனியள்?" கேட்டால் - ஏதோவெல்லாம் கதைகள் பல சொல்லி, பிறகு கொஞ்சம் சிரித்து, அது விசாலமாகி கண்ணீர் வரும் மட்டும் கெக்கட்டமாகப் போய், கடைசியில் 'அதடா தம்பி! அவங்களோடை வேலை செய்ய முடியாதடா தம்பி!' என்று முடிப்பார்.
கோபாலர் போய் விட்டார். இனி துணைக்கு ஒருவருமில்லை என்று தெரிந்த பின் சைக்கிளை வேகமாக அழுத்தினேன். அது மூன்று நிமிடங்களில் வீட்டு வாசலை அடைந்தது. ஊரில் ஒரு காக்கா, குருவி கூட இல்லை. ஏன்? இரும்புக் கம்பிகளிலான 'கேற்'கள், வீட்டின் கூரைக்குப் போடப்பட்ட 'சீற்'கள், ஜன்னல் நிலைகள், கதவுகள் இன்னும் பலவும் இருக்கவில்லை. வீடு பூட்டியது பூட்டியபடி கிடக்கும் என்று நினைத்து அம்மா திறப்புத் தந்துவிட்டா. சைக்கிளை கொண்டுபோய் மறைப்பாக உள்ளே வளவினுள் விட்டேன்.
கிணற்றடிப் பக்கமாக, மறைப்பாகக் கட்டிய வேலியோரமாக சரசரத்து நாயொன்று ஓடியது. நிச்சயமாக அது எங்கள் நாய்தான். 'ஏய்! ஏய் ரேணு போய். ஏய் ரேணுப் பெடியா நில்லடா'. அது கொஞ்சத் தூரம் ஓடி, பின் நின்று என்னை உற்றுப் பார்த்து முறைத்துவிட்டு மறுபடியும் ஓடியது. நான்கு வருடங்கள் நன்றியுடன் வளர்ந்தது. மூன்றே மூன்று வாரங்களில் என்னை மறந்து போய்விட்டது. மனம் விம்மித் தணிகிறது. போகட்டும். சிந்திப்பதற்கு இது நேரமில்லை. துரிதமாகச் செயற்பட வேண்டும்.
முதலில் சுவாமிப்பட அறையினுள் நுழைந்தேன். அங்குதான் எங்கள் புத்தக அலுமாரி உள்ளது. அதற்குள் தான் எல்லாப் பொக்கிசங்களும். வீட்டின் கூரை உடைந்து உள்ளே வெளிச்சம் பரவிக் கிடக்கின்றது. வெளிச்சம் பரவும் பாதையினால் ஏற்கனவே புகுந்த மழைநீரின் விசித்திரக் கோலம் தெரிகிறது. புத்தக அலுமாரி சரிந்து புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அவை மழை நீரில் ஊறி ஊதிப்போயிருந்தன. நல்ல காலம், அம்மா காணி உறுதிகளை முதலிலேயே எடுத்துக் கொண்டு போனது. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் அன்று ஓடினோம். அவற்றுள் எனது தேடுதல் முயற்சி பலன் தரவில்லை. மூலையில் சுவாமிப்படங்கள் விழுந்து உடைந்திருந்தன. ஒரே கண்ணாடித்துண்டுகள். அந்த வேலையைப் பாதியில் விட்டு விட்டு கட்டு விறகு வைத்திருந்த தாழ்வாரப் பக்கம் போனேன்.
கட்டு விறகு கிடைத்தது. எடுத்து சைக்கிளில் பரவிக் கட்டினேன். 'கரியரில்' சாமான்களை கூடுதலாக ஏற்றுவதற்காக பெரிய தடிகளை இணைத்திருந்தேன். அம்மாவுக்கு ஒரே புளுகமா இருக்கும்.  பச்சை விறகை எவ்வளவு நாளுக்கென்று தான் புகை வர ஊதுறது. கடகமும் மண்வெட்டியும் சரிந்து கிடந்தன. அவற்றை இன்றைக்குக் கொண்டு போகச் சரிவராது. இருக்கிற நிலமையைப் பார்த்தால் அடுத்த முறை வரும்போதும் கொண்டு போக முடியாது போலத்தான் உள்ளது. கள்ளரின் லீலைகள் படுமோசம்.
மாவும் பலாவும் காய்த்துக் குலுங்கின. வாசனை தூக்குத் தூக்குகின்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த மரங்கள்கூட கருகிப் போய்விடும். வளவு முழுக்கத் தேடியும் எட்டுத் தேங்காய்கள்தான் கிடைத்தன. மண்வெட்டியைக் கவிழ்த்து வைச்சு, மளமளவென்று உரித்து, கொண்டு வந்த சாக்கு முடிச்சுக்குள் போட்டு அதையும் சைக்கிள் கரியரில் கட்டியாயிற்று.
உயிரைப் பணயம் வைத்து, 'சேர்ட்டிபிக்கற்' எடுக்கவென்று வந்து அது கிடைக்காமல் போனது கொஞ்சம் மனவருத்தம் தான். தற்காலிகமாக வேலை செய்த இடம், இடம்பெயர்ந்த வலயத்துக்குள் இருந்ததால் வேலையும் போய் விட்டது. கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலை படித்த பட வரைஞர் (Draughtsman) படிப்புக்கு இனி ஒரு வேலை புதுக்கத் தேடுறது என்றால் கல்லிலை நார் உரிக்கிற மாதிரித்தான். அதுவும் 'சேர்ட்டிபிக்கற்'றும் இல்லையென்றால்...
இன்னமும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. மறுபடியும் சுவாமிப்பட அறைக்குள் நுழைந்தேன். இன்னுமொரு தடவை முயற்சி செய்து பார்ப்போம். முயற்சி மெய் வருந்தக் கூலி தரும். புத்தகங்கள் எல்லாம் இதழோடு இதழ் நீர் கோர்த்து கனமேறிப் போயிருந்தன. இதில் அரைவாசிப் புத்தகங்கள் பாடசாலையில் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தவை. சரிந்து கிடந்த அலுமாரிக்குக் கீழும் ஏதாகிலும் கிடைக்கலாம். அதைப் பிடித்து இழுத்தேன். அது சத்தம் போட்டுக் கொண்டு மேலும் உடைந்தது. குந்தியிருந்து தேடியதில் இடுப்பு விறைத்துப் போயிருந்தது. எழும்பி நாரிக்குக் கை ஊன்றும் போதுதான் அவனைக் கண்டேன்.
அறை வாசலில் உட்புறமாக, கதவோரத்தில் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தான். ஒரு கணம் நெஞ்சு திக்கென்றது. உடம்பு பயத்தினால் நடுங்கத் தொடங்கியது, சிங்களவனாக இருக்கலாம்.
"என்ன அண்ணை, புத்தகங்கள் தேடுகிறியளோ?" தமிழில் அவன் கேட்ட போதுதான் போன உயிர் வந்தது.
"இல்லை. என்னுடைய சேர்ட்டிபிக்கற் ஏதாகிலும் இருக்குதோவெண்டு பாக்கிறன்."
அவன் கலகலவெனச் சிரித்தான்.
"சேர்ட்டிபிக்கற்றோ?" குரலில் ஏளனம் தொனித்தது. எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"படிச்சிருந்தால் தெரியும் அதன் அருமை" நான் சொன்ன அந்த வசனம் அவனைக் கடுப்பேற்றியிருக்க வேண்டும். மறுகணம் அவன் கத்தத் தொடங்கினான்.
"உங்களையெல்லாம் ஆர் இஞ்சை வரச் சொன்னது? ஒருத்தரையுமல்லே இஞ்சை வரவேண்டாம் எண்டு அறிவிச்சனாங்கள்" சீறிப் பாய்ந்தான் அவன். சுவரில் சாத்தியிருந்த துப்பாக்கி என் நல்ல காலத்திற்கு என் கவனத்தை ஈர்த்தது. நான் வாய் திறக்கவில்லை. கண்களில் நீர் முட்டியது. அவனைப் பார்க்காமலே வேறு புறம் பார்வையைச் செலுத்தினேன். கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அவன் நின்றான்.
"உங்களுக்கு ஏதாவது உதவி நான் செய்ய வேண்டுமா?" என்று என்னைக் கேட்டான். நான் தலையை இல்லையென்று ஆட்டினேன்.
வெளியே எட்டிப் பார்ப்பதும், திரும்பவும் உள்ளே வருவதுமாக இருந்தான் அவன்.
"ஏன் நான் சத்தம் போட்டனான் எண்டால், இந்த இடம் இப்ப பிரச்சனைக்குரிய இடம். எந்த நேரமும் சிறீலங்கா ஆமி வரலாம். சொல்ல முடியாது. போனகிழமை ஒருக்காப் புகுந்து கலைச்சு விட்டனாங்கள். அவங்கள் வாற நேரம் நீங்களும் இஞ்சை நிண்டால் எப்பிடியிருக்கும். வீணா அநியாயமாக சாக வேண்டி வரும்" திரும்பவும் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
"நாங்கள் இஞ்சை மூண்டுபேர் மட்டிலைதான் இருக்கிறம். அதுவும் நாங்கள் இந்த இடத்துக்குப் புதுசு. துணைப்படைக்கு உங்களைப் போல ஆக்களும் வந்து உதவி செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும். எங்கட பிரச்சினையை நாங்கதான் தீர்க்க வேணும். எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிற சுமையை நாங்கள்தான் இறக்க வேணும்."
அங்கே ஒரு நிமிடம் அமைதி நிலவியது. அவனுடைய போதனைகள் ஒவ்வொன்றும் நெஞ்சினுள் பொறியாக விழுந்தன.
தேடியதில் ஒன்றும் கிடைக்கவில்லை. போவதற்கு ஆயத்தமானேன். சைக்கிளை 'ஸ்ராண்'டில் இருந்து விடுவித்து மெல்ல உருட்டும் போது, மீண்டும் எங்கள் 'ரேணு போய்' முன்பக்க வாசலால் மூச்சிரைக்க ஓடி வந்தது.
"ரேணு போய்! டேய் ரேணுப் பையா!!" என்னையும் அறியாமல் கத்தினேன்.
அதற்குப் பின்னால் திடுதிப்பென்று இன்னொரு இளைஞன் வாசலில் தோன்றினான்.
"டாக்டர்! டாக்டர்!! எங்கையெல்லாம் உங்களை நான் தேடுறது? 'டக்'கெண்டு வாறன் எண்டிட்டுப் போனியள்" என்று கூப்பிட்டபடியே எங்கள் வளவினுள் அவன் நுழைந்தான். என்னைக் கண்டதும் திகைத்து, தனது துப்பாக்கி முனைகளில் கைகளைப் பதித்தான். எல்லாம் கனவு மாதிரி. அந்த நிமிடத்தின் விலையை என்னால் எப்பிடிச் சொல்ல முடியும்.
"டேய்! டேய், பொறடா பொறடா வாறன் ராமு" என்றபடியே உள்ளுக்கிருந்தவன் வெளியே ஓடி வந்தான். நான் தப்பிப் பிழைத்தேன்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை ஏதோ துவக்குச் சத்தம் கேட்ட மாதிரிக் கிடந்தது. அதுதான் ஓடி வாறன் டாக்டர்."
"கொஞ்ச நேரமெண்டால்?"
"ஒரு இரண்டு மூண்டு நிமிஷம் இருக்கும்."
"உனக்கு எப்பவும் துவக்குச் சத்தம் கேட்டபடிதான் ராமு. அண்ணை உங்களுக்கு ஏதாவது கேட்டதா?" என்று என்னைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்தபடியே கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்டினேன்.
"அண்ணை, நீங்கள் ஏதோ ரேணுப்பையா என்று கூப்பிட்டமாதிரிக் கிடந்தது? யார் அது?"
"அது! இப்ப கொஞ்சம் முன்னாலே ஓடிப்போச்சுதே ஒரு நாய். அது எங்கட நாய்."
"உங்கட நாயா? அந்த நாய் இஞ்ச எங்களுக்கு நல்ல உதவி. ஆராவது ஆக்கள் இந்தக் கிராமத்துக்கை நுழைஞ்சா உடனை எங்களுக்குக் காட்டிக் குடுத்திடும்" என்றான் அவன்.
"அதை மாத்திரம் திருப்பித் தாங்கோ எண்டு கேட்டுப் போட வேண்டாம்" என்றான் ராமு. சில கேள்விகளுக்குக் கேட்பதற்கு முதலே பதில் கிடைத்து விடுகின்றது. தங்கைச்சிக்கு அதைப் பார்த்ததைப் பற்றி சொல்லாமல் விடுவதுதான் நல்லது.
"டாக்டர் மணி என்ன ஆகுது?" என்றான் ராமு. அப்போதுதான் நான் என் மணிக்கூட்டைப் பார்த்தேன். மணி ஆறு ஐந்து.
"ஒ! ஆறு ஐந்து!"
இந்த நேரம் கோபாலர் வெளிக்கிட்டு இருப்பார். நான் அவசரமாக வெளிக்கிட்டேன். சிலவேளை என்னைப் பார்த்துக் கொண்டும் அவர் நிற்கலாம். ஆனாலும் மனதை ஏதோ ஒன்று குடைந்தது. 'டாக்டர், டாக்டர்' என்று ராமு அவனைக் கூப்பிடுகிறானே! ஒருவேளை உண்மையில் டாக்டரா, அல்லது பட்டப் பெயரா? கேட்டுவிட்டால் சந்தேகம் தீர்ந்தது.
"உங்களை ஒன்று கேட்பேன். குறை நினைக்க வேண்டாம். நீங்கள் உண்மையில் ஒரு டாக்டரா?" சைக்கிளில் ஏறியபடியே கேட்டேன்.
"ஏன் நான் டாக்டராக இருக்கக் கூடாதா?" என்று சிரித்தபடியே கேட்டுவிட்டு "அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். எனக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.
"டாக்டர், தயவு செய்து நான் ஏதாவது தவறுதலாகப் பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போட்டு வாறன்."
"போங்கள். மீண்டும் இங்கே வராதீர்கள்."
அவனது பேச்சு - எனக்கு ஏதோ போல் இருந்தது. மனதுக்குள் கவலை நெருட சைக்கிள் ஓடத் தொடங்குகின்றது.
"நான் போட்டு வாறன்." திரும்பவும் நான் சொன்னேன்.
வாசிகசாலையடியில் கோபாலரைக் காணவில்லை. போய்விட்டார். ஒரு ஐந்து நிமிஷம் என்னைப் பார்த்திருக்கலாம். மனிசன் இவ்வளவிற்கு பள்ளிக்கூடத்தைத் தாண்டியிருக்கும். இந்த வயசிலும் நல்ல சுறுசுறுப்பு. ஒரு நேரம் சும்மா இராது. ஒருவேளை இன்னமும் வீட்டிலையே நிண்டு கொண்டு ஏதேனும் பொறுக்கிக் கொண்டு நிற்பாரோ? மனம் ஒருதடவை அவரைப் பார்த்துவிட்டுப் போ என்றது. சைக்கிளை மெதுவாகத் திருப்பி, குறுகலான பாதை வழியே உள்ளே செலுத்தினேன். வீட்டு வாசலில் காலூன்றியபடியே அவரைக் கூப்பிட்டேன். சத்தமில்லை. மரங்கள் கூடலாக வளர்ந்து வளவு இருண்டு கிடந்தது. அந்த மரங்களின் இடுக்குகளினூடாக யாரோ என்னைப் பார்ப்பது போன்ற பிரமை. மளமளவென்று திரும்பி சைக்கிளை அழுத்தினேன்.
பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தலையளவு சுமையுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். தெரு மூலையில் திரும்பும் போது அம்மாவும் தேவகி அக்காவும் எங்கள் வீட்டு வாசலின் முன்னால் நிற்பது தெரிகிறது. என்னுடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். கோபாலர் வேப்பமரத்து நிழலில் இருந்து சீனியையும் தொட்டுத் தொட்டுத் தேநீர் குடித்துக் கொண்டிருப்பார். என்னை விட்டிட்டு வந்ததுக்கு, தேவகி அக்காவிட்டை நல்ல 'சமா' வாங்கியிருப்பார். பேராசை பிடிச்ச மனிசன். எதிலும் அவசரம்.
வேகத்தைத் தணித்து சைக்கிளை வீட்டிற்குள் செலுத்தினேன். வீடு தெருவிலிருந்து உள்ளுக்குள் இருந்தது. அம்மா என்னைப் பார்த்து ஏதோ கேட்கின்றா.
"பொறம்மா வாறன். சைக்கிள் ஒரே பாரமா இருக்கு. இதிலை நிற்பாட்டேலாது."
"தம்பி இவர் எங்கை?" தேவகி அக்கா பின்னாலே கலைத்துக் கொண்டு வந்து கேட்கின்றா.
"அவர் எப்பவோ வெளிக்கிட்டிட்டாரே!"
"போகேக்கை ஒண்டாப் போனியள். இப்ப என்ன சொல்லுறாய்?" அம்மா கத்தினாள். அப்பிடியெண்டால்?
என் தலை சுற்றுகின்றது. நெஞ்சுக்குள் ஒரு நடுக்கம் உருவாகி உடம்பெல்லாம் ஊடுருவுகின்றது. சடுதியாக சைக்கிளை நிற்பாட்டுகின்றேன். அது சமநிலை தவறி பொதியுடன் என் மேல் சரிகின்றது. என் மூளை நிதானத்தை இழக்கின்றது. 'அத்தான்!" தேவகி அக்கா மூக்கால் சிணுங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு ஓடுகின்றா.
மனமெனும் பொந்தினுள் விழுந்த 'பொறி' தீயாகப் பெருகி கொழுந்து விட்டு எரிகின்றது.

பூபாள இராகங்கள் 
ஆனி  - 2006


No comments:

Post a Comment